Monday, 23 December 2013

Malaiyadipatty perumal

Malaiyadipatty Kanniraintha Perumal . Malaiyadipatty - 17 kms from Keeranur , Pudukkottai or the same
distance from Arasur pirivu in Trichy-Tanjore National Highway 4way road. 

நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா என்று யாராவது கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அடியேன் கடவுளைப் பல முறை பார்த்தேன், பல முறை பார்த்து விட்டேன், கடவுள் விரும்பினால் இன்னும் பல முறை அவரை தரிசனம் செய்வேன், என்று நீங்கள் கூறலாம். எப்போது இந்த பதிலை நீங்கள் கூற முடியும்?

நீங்கள் திருஅண்ணாமலையை பல முறை தரிசனம் செய்திருந்தால், பல முறை திருஅண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வழிபட்டிருந்தால் நீங்கள் இந்த பதிலைக் கூற முடியும். காரணம், ஆதி மூலப் பரம்பொருளாம் இறைவன் மலை வடிவில் எழுந்தருளிய திருஅண்ணாமலையை தரிசனம் செய்த அனைவருமே கடவுளை நேரிடையாகத் தரிசனம் செய்தவர்கள்தான்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருஅண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் எந்த வடிவில் காட்சி தந்து அருளினான்? அடிமுடி காணாத அருட் பிழம்பாக, ஜோதிக் கனலாக, சுடர் பிழம்பாக, ஒளி விட்டுப் பிரகாசிக்கும், விண்ணையும் மண்ணையும், ஆகாயத்தையும் பாதாளத்தையும் இணைக்கும் தூண் வடிவில் ஓங்கி உயர்ந்து நின்றார் சுவாமி.  

எம்பெருமானின் ஒப்பற்ற, எல்லையில்லா இந்த ஒளி பிரவாகத்தைத் தன் திருக்கண்களில் பூரணமாக நிறைத்துக் கொண்ட பெருமாள் மூர்த்தியே திருச்சி அருகே மலையடிப்பட்டி என்னும் திருத்தலத்தில் (பண்டைய பெயர் திருஆலத்தூர்) ஸ்ரீரங்கநாத மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு திருஅண்ணாமலையாரின் அருளாசிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

எம்பெருமானின் எல்லையில்லாத ஜோதி சக்தியை பாமர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் பெருங் கருணை கொண்ட விஷ்ணு மூர்த்தி தன்னுடைய திவ்ய நேத்ரங்களில் அருணாசல ஜோதியின் பேரொளியைத் தாங்கி அதை சாதாரண மனிதர்களும் பெருமளவிற்கு எளிமையான இறை சக்தியாக மாற்றி வழங்குகிறார்.

கமலக் கண்ணன் என்று பெருமாளை ஆழ்வார்கள் பாடி மகிழ்கிறார்கள், போற்றித் துதிக்கிறார்கள். செந்தாமரைக் கண்ணன், புண்டரீகாக்ஷ பெருமாள் என்று பெருமாளின் கண்கள் அத்துணை சிறப்புடன் புகழப்படுவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? ஆம், எல்லையில்லாத இறைவனின் திருக் காட்சியைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அழகிய மணவாளனாக விளங்கியதால்தான் பெருமாளுக்கு கண்ணன், கமலக் கண்ணன் என்ற அற்புத திருநாமங்கள் அமைந்தன. 

இக்காரணம் பற்றியே திருஆலத்தூரில்அருள் புரியும் ரெங்கநாத அண்ணல் கண்ணிறைந்த பெருமாள் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார். 

ஒரு முறை நமது சிறுவனான வெங்கடராம சுவாமிகளை கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த சுவாமிகள் இத்தலத்திற்கு அழைத்து வந்தார். ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்து நாட்களிலும் திருஅண்ணாமலையில் தனது குருநாதரான இடியாப்ப சித்தபிரானுடன் அன்னதான கைங்கர்யத்தை திருஅண்ணாமலையை கிரிவலம் அடியார்களுக்கு நிறைவேற்றி வந்தார் திரு வெங்கடராம சுவாமிகள். தனது ஒன்பதாவது வயதில் ஆரம்பமான இந்த அன்னதான வைபவம் பற்றி அடிக்கடி ஸ்ரீகுருமங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகள் குறிப்பிடுவது வழக்கம்.


முதன் முதலில் திருஅண்ணாமலையில் அன்னதான வைபவத்தை ஆரம்பிக்கும் முன்தான் மலையடிப்பட்டி திருத்தலத்திற்கு கோவணாண்டிப் பெரியவருடன் வருகை புரிந்தார். திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்திற்கு முதல் நாள் திருச்சி அருகே உள்ள திருஎறும்பூர் திருத்தல ஈசனை இடியாப்ப சித்தருடன் தரிசித்து விட்டு அத்திருக்கோயில் படிகளில் பெரிவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டிருந்தான் சிறுவன், 

பெரியவர் திருஎறும்பூர் மலையைச் சுட்டிக் காட்டி, ”இதை ஒரு சாதராண மலை என்று சொல்லிட முடியுதுடா, இனி வரப்போகும் காலங்களில் உலகையே ஆளும் கம்ப்யூட்டர் துறைக்கு வழிகாட்டியாக அமைவது இந்த மலைதான். இதன் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனிதனை விட 2000 மடங்கு கம்ப்யூட்டர் துறையில் முன்னேறிய நிலையில் உள்ளவையே இங்கு உள்ள எறும்புகள். இந்த எறும்புகளின் மூளை ஆற்றலை எவராலும் புரிந்து கொள்ள முடியாது.”

” அவ்வளவு ஆற்றல் இந்த எறும்புகளுக்கு எப்படி வந்தது, வாத்யாரே?”

”எதுவுமே ஈஸியா வந்துடாது, நைனா, எந்த வித்தையும் பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் வரும். அந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தை சரியா ஒரு மனிதன் அடைவதற்கு அவனுக்கு வழிகாட்ட எவ்வளவோ திருத்தலங்கள் பூமியில் உண்டு. அதில் ஒரு திருத்தலம்தான் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள கண்ணாயிரமுடையார் திருத்தலம். (இத்தல ஈசனுக்கு திரு வாகீசர் என்ற நாமமும் பிரசித்தம்), இங்கே இருக்கிற எறும்புகள் எல்லாம் ஒரு காலத்தில் அந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனையும் பெருமாளையும் வேண்டித்தான் தங்கள் பூர்வ ஜன்ம பயனால் அற்புத மூளை ஆற்றலைப் பெற்றன.”

சிறுவனுக்கு உற்சாகம் கரை புரண்டது.

”ஒரே இடத்தில் சிவனும் பெருமாளுமே இருக்கிறார்களா?”

”ஆமாண்டா, கண்ணு. கண்ணாயிரமுடையார் என்ற திருநாமத்தைத் தாங்கி எம்பெருமான் ஈசனும். அவன் திவ்ய உருவத்தைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அதன் காரணமாக கண்நிறைந்த பெருமாள் என்று பெயர் பெற்ற பெருமாள் மூர்த்தியும் ஒருங்கே உறையும் தலம்தான் திருஆலத்தூர் திருத்தலமாகும். (தற்போது இத்தலம் மலையடிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது), மிகவும் தொன்மையான திருத்தலம். இங்குள்ள பெருமாள் (திருச்சி) ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கே மூத்தவர் என்றால் அவருடைய பெருமை எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்.” 

சிறுவனிள் கண்கள் அகலமாக விரிய பெரியவர் மேற்கொண்டு கூறிய விஷங்களை கேட்டுக் கொண்டிருந்தான். தான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது கூட அவனுக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. காலையில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரி குளியில் முடித்து ஸ்ரீரெங்கநாதரின் தரிசனத்திற்குப் பின் நேரே திருவெறும்பூர் நடந்தே வந்து விட்டதால் நடுவில் உணவு ஏதும் சிறுவனுக்குக் கிடைக்கவில்லை. 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி குளியல் நிறைவேற்றியவுடன் தினமும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படும் பெருமாள் பக்தர்கள் அம்மாமண்டபம் சாலை வழியாக நடந்தே சென்று ஸ்ரீரெங்கப் பெருமாளைத் தரிசனம் செய்கிறார்கள் என்பது பெரியவர் சிறுவனுக்கு அளித்த திருவாய் மொழி. இது இன்றும் நடக்கும் ஆனந்த வைபவம். அத்தருணத்தில் அவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் அவர்கள் காற்றுப்பட்டால் கூட எல்லையில்லா அனுகிரக சக்திகள் கிடைக்கும் என்பது உண்மை. எனவே, முடிந்த மட்டும் திருச்சி வாழ் மக்கள் இந்த தெய்வீக சந்தர்பத்தை பயன்படுத்தி நித்திய சூரிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்று உய்வடைய வேண்டுகிறோம். 

பெரியவர் சிறுவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவில் திருஆலத்தூருக்குப் புறப்பட்டார். அக்காலத்தில் தற்போது உள்ளது போல் தார் ரோடுகள் கிடையாது. கருங்கல் ஜல்லிகள் நிரவிய சாலைகளே பெரும்பாலும் இருந்ததால், சிறுவன் மிகவும் சிரமப்பட்டு கோவணாண்டிப் பெரியவருடன் நடந்து வந்தான். தற்போது வழங்கும் பெயர்களான துவாக்குடி, அசூர் என்ற ஊர்களின் வழியாக சிறுவனை அழைத்துக் கொண்டு பெரியவர் திருஆலத்தூரை அடைந்தபோது சிறுவன் மிகவும் களைப்படைந்து விட்டான். ஆனால், அந்நிலையிலும் பெரியவர் அத்திருத்தலத்தைப் பற்றி அளித்த விளக்கங்களை தன் மனதினுள் நிறைத்துக் கொண்டான். 

பெரியவர், ”ஒருவர் தன்னுடைய பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளை முறையாகப் பெற வேண்டுமானால் இத்தல மூர்த்திகளை அவசியம் வழிபட்டாக வேண்டும். 

”கண்ணாயிர ஈசனை கண்களில் நிறைக்கவே எண்ணிறந்த வினைகள் எரிந்து சாம்பலாகுமே, என்று சிலக்காகித சித்தர் இத்தல ஈசனின் மகிமையை புகழ்ந்து பாடி உள்ளார். ஒரு மனிதனுடைய வினைகள் எரிந்து மறைந்தால் அவனுக்கு இறைவனுடைய காட்சி கிடைக்கும். அப்போது அவனுடைய கண்கள் இறை தரிசனத்திற்கான தகுதியைப் பெறும்,” என்று தொடர்ந்த பெரியவர் அத்தல மகிமைகளைப் பற்றி விளக்கிக் கொண்டே சென்றார்.

இருவரும் அத்திருக் கோயிலின் முன்னே ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்தனர். பெரியவர் கூறிய இறை விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் பல மைல்கள் நடந்து வந்த களைப்பில் அவர் மடியிலேயே படுத்துத் தூங்கிப் போய் விட்டான். 

No comments:

Post a Comment