Thursday 5 December 2013

ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வேங்கடவன் அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே, வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம்.
தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர். பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது. ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம். மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.
""சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது. ஏழையாய் பிறந்த பாவத்தால் என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக வாங்க முடியவில்லை,''. அவன் பரிதாபமாக சொன்னது கேட்டு, குரு சிரித்தார். அமைதியாய் பேசினார், ""மகனே! அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் துளிக்கூட உண்ண இயலாது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா! தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா? 
பிறருக்கு பகிர்ந்தளித்தல் தான்! அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது.
திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது. இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும். இறைவனின் கருணையும் அப்படித்தான். 
அவனது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.
உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறு துண்டை, நீ எடுத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே வந்து விடுவான்,'' என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.
Click Here

No comments:

Post a Comment