Thursday 5 December 2013

பேரருளாளனான இந்தப் பெருமாளை ‘நாராயணா’ என்று உளமாற, வாயார, மெய்யுருகிச் சொல்லி உய்வடையும் பேறு நான் பெற்றேன்,’ என்று பாடி  கூத்தாடுகிறார். தங்களது மூத்த சகோதரன் தஞ்சகன் பகவானால் வதம் செய்யப்பட்டதை அறிந்த தண்டகன், அவரைத் தாக்க முற்பட்டான். ஆனால், பெருமாளின் பராக்கிரமத்துக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால், பயந்தோடி பாதாள உலகிற்குச் சென்று ஒளிந்துகொண்டான். அதை  அறிந்த திருமால் வராக உருக்கொண்டு, பூமியைக் குடைந்து சென்று, அவனைத் துரத்தினார். (இந்த வராகர் மீண்டும் பூமிக்கு மேலே எழுந்த  தலம்தான் ஸ்ரீமுஷ்ணம்.) தன்னை விடாமல் துரத்தி வரும் அவரை பயமுறுத்துவதாக நினைத்துக்கொண்டு  யானை உருக்கொண்டு பெருமாளை  எதிர்க்க முற்பட்டான். 

அதைக் கண்ட திருமால் தான் யாளி உருக்கொண்டார். சிங்க முகனாக, யானையுடன் பொருது அதனை வீழ்த்தினார். தண்டகன்  தலை சாயும் நேரத்தில், தன்னை பெருமான் ஆட்கொண்டு அருளவேண்டும் என்றும், தான் வீழ்த்தப்பட்ட அந்தப் பகுதி தண்டகாரண்யம் என்று  அழைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதோடு, தனக்குக் காட்சியளித்த அதே ‘வீரசிங்கப் பெருமாளா’க அங்கே அர்ச்சாவதாரம்  கொண்டு, பக்தர்கள் அனை வரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தான். அவன் விருப்பபடியே அவர் கோயில் கொண்டார்.  ‘தஞ்சையாளி’ என்று பெயரும் கொண்டார். சரி, இந்தக் கோயில் இப்போது எப்படி விளங்குகிறது?

இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்தால் வலதுபக்கம் திருமங்கை யாழ்வார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அ ருகே வாகனக் கூடம். பிராகாரச் சுற்றில் தஞ்சைநாயகித் தாயார் அழகு தரிசனம் அருள்கிறார். வடமேற்கில் நாகர்கள். ஆண்டாள் சந்நதிக்கு அருகில்  பரமபத வாசல். கருவறை மண்டபத்தில் கருடாழ்வார், இவருக்கு எதிரே அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக நெடிதுயர்ந் திருக்கிறார் மூலவர் நரசிங்கப்  பிரான். பிரமாண்ட தோற்றத்தால் பயமுறுத்தினாலும் கண்களில் பொங்கும் கருணைக்கு அளவே இல்லை. தண்டகனை வீழ்த்திய உக்கிரம், தினவெ டுத்த அந்த உடலில் தெரிந்தாலும், விழிகள் பிரதிபலிக்கும் வாஞ்சையில் மனசு உருகித்தான் போகிறது. 

ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள் பரிபாலிக்கிறார் இந்த சிங்கமுக சீலன். அதே கருவறை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாதர், வரதராஜப் பெருமாள், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தான், ஸ்ரீராமானுஜர், மணவாள  மாமுனிகள் ஆகியோரையும் தரிசித்து அருள் பெறலாம். பரமேஸ்வரன், லக்ஷ்மி நரசிம்மரைத் துதித்த ஸ்தோத்திரத்தை கருவறை மண்டபச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதேபோல கடன் நிவாரண  ஸ்லோகமும் இடம்பெற்றுள்ளது. வராக ரூபம் கொண்டு இங்கே பூமியைக் குடைந்து திருமால் சென்றதால், இந்தத் தலத்தை வராக க்ஷேத்திரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்தப்  பதியை ருணவிமோசன தலமாகச் சிறப்பிக்கிறார்கள். கடன் தொல்லைகளிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்களை இந்த நரசிம்மப் பெருமாள்  கைதூக்கி விடுகிறார். இதனாலேயே பகை அழிக்கவல்ல திருத்தலம் இது என்று பூதத்தாழ்வார் பாடுகிறார்: 

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதில் குடந்தை என்பரே
ஏஅல்ல எந்தைக்கு ஏற்ற இடம்

‘பகை அழிக்கவல்லப் பெருமாள் எங்கெங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறார்?  சீர்மிகு திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தம் கதியாகக் கருதிப்  போற்றும் திருவேங்கடம், பக்தர்களை தன்னிடமும் திருப்பற்கடலை உணரவைக்கும் கடல்மல்லை, திருக்கோவலூர், மதில்களால் சூழப்பெற்ற திருக்கு டந்தை, இவை மட்டுமா, இந்த தஞ்சை மாமணிக் கோயில் மற்றும் இதற்கும் மேலாக பக்தர்களின் உள்ளம் இங்கெல்லாம் தான் அவர்  கோலோச்சுகிறார்’ என்று பாடி மகிழ்கிறார் பூதத்தாழ்வார். மூன்றாவதாக வந்தான், அரக்கன் தாரகன். பூமியிலிருந்து வானுக்குப் பெரும்புகையாக வளர்ந்தான். அடர்ந்து, கருப்பாகி, உலகையே இருட்டடித்தான்.  

அப்படியே பகவானையும் திக்குமுக்காட வைக்க நினைத்தான். ஆனால், பெருமாளோ பிரமாண்ட ரத்தின மலையாக, மணிக்குன்றமாக, உருவெடுத் தார். அந்த அசுரப் புகையை அப்படியே உறிஞ்சிக்கொண்டார், தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். அங்கேயே மணிக்குன்றப் பெருமானாக  அர்ச்சாவதாரம் எடுத்தார். 
மூன்றாவது அரக்கனை சம்ஹாரம் செய்வதற்காகப் பெருமாள் இந்த மூன்றாவது உத்தியைக் கையாண்டார். முதலிரு அரக்கர்களை வதம் செய்ததற்கு  ஒப்பான பராக்கிரமம் இந்த வதத்தில் இல்லை என்பதாலோ என்னவோ, மணிக்குன்றப் பெருமாளின் கோயிலும் மிக எளிமையாகவே விளங்குகிறது.  

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் அம்புஜவல்லித் தாயார் தனி சந்நதி கொண்டிருக்கிறார். மூலவர் மணிக்குன்றப் பெரு மாள், அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை மண்டபத்தில் ஆழ்வார்கள் தரிசனம் தருகிறார்கள். பொதுவாகவே தீவினைகளை அழிக்க பகவான் புது அவதாரமோ அல்லது புது உருவோ கொள்வதுண்டு. அந்த வகையில் இந்த மூன்று அரக்கர்களையும் அழிக்க பெருமாள் மூன்றுவகை வடிவங்களைக் கொண்டார். ஒரே தொகுதியாக மூன்று அசுரர்களை அழித்ததால் இம்மூன்று கோயில்களும்  ஒரே திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் கொள்ளலாம்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கின்றன இந்த முக்கோயில்கள். தஞ்சை மாமணிக் கோயிலுக்குச் சென்று நீலமேகப் பெருமாள், நரசிங்கப் பிரான், மணிகுன்றப் பெருமாள் மூவரையும் தரிசிக்கும்வரை இந்தத் தலத்து  இரு தியான ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்: (இந்த இதழுடன் தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் தரிசனம் செய்துவிட்டோம். (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி-திரு மலையையும் சேர்த்து). இனி மலைநாட்டு திவ்ய தேசங்கள் எனப்படும் கேரள மாநிலத் திருக்கோயில்களை அடுத்தடுத்து தரிசிப்போம். முதலில்,  அந்நாளில் மலை தேசத்துடன் இணைந்திருந்த இப்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயில் அருகே அமைந்திருக்கும்  திருவண்பரிசாரம் திருத்தலத்தை தரிசிப்போம்)  

தியான ஸ்லோகம்

நரசிங்கப் பெருமாள்
ஸ்ரீமத் தஞ்ஜ புராலயஸ்து பகவாந் ஸ்ரீமாந் ந்ருஸிம்ஹோ                                                                   மஹாந்
தேவி தஞ்ஜ புரீச்வரி ச்ருதி சிரோ வேத்யம் விமானம்பரம்
தீர்த்தம் தத்ரது காலிகாஹ்வயஸர: பச்யதிசம் தக்ஷிணாம்
மார்க்கண்டேய வரப்ரதான ஸுமுகம் சாஸீந ரூபோ ஹரி:
ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்
பொதுப் பொருள்:  தஞ்சையில், தஞ்சாபுரிநாயகித் தாயாருடன், சிங்கபிரானாகக் காட்சிதரும் பெருமாளே நமஸ்காரம். சுருதிசிரோ விமான நிழலில்  காலிகா தீர்த்தக் கரையில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த எம்பெருமானே நமஸ்காரம்.




No comments:

Post a Comment