Thursday, 10 April 2014

MEYYADIYAAN NARASINGA MUNAIYARAIYAR

சீரும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டை நரசிங்க முனையரையர் என்னும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். ஒரு திருவாதிரைத் திருநாளன்று  மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர்கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப்பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப்படைந்து விலகிச் சென்றனர். ஆனால் மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்.
குருபூஜை: நரசிங்க முனையரையர் நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்.

No comments:

Post a Comment