Thursday, 10 April 2014

SIRAPPULI NAYANMAAR

பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச்சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார். இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை  அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.
குருபூஜை: சிறப்புலியார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

No comments:

Post a Comment