புகழ்ச்சோழ நாயனார்
வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா...? மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன்.
சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர். எம்பெருமானின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!
குருபூஜை: புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்க்கு அடியேன்.
No comments:
Post a Comment