அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.
ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.
குருபூஜை: செருத்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்.
No comments:
Post a Comment