Saturday, 26 April 2014

NEEDUR SOMANATEESWARAR - REMOVING SKIN DESEASES

சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் விளங்கி வரு கிறார் சோமநாத சுவாமி. சகல சாபங்களையும் போக்கும் கோயில் இது என்கின்றார் பதஞ்சலியார். சூரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம்  சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ்மிக்க தலமிது. பெரும் பதவிக்காரனாகிய தேவேந்திரனே உருவாக்கி, தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி. சகல பிறவிகளிலும் ஏந்திய  சாபங்களை, தோஷங்களை நீக்க வல்லவர். எந்த ஒரு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு. துக்கங்களைக் களையும்,  சங்கடங்களை நாசஞ் செய்யும் கருவூலமே இச்சோமநாதப் பெருமான். இதனை பதஞ்சலியார்,

‘‘வினைப்பயனை யறுத்தே பேரின்ப
முடன் ஆனந்த வாழ்வையீவான்
அருணமைந்தேத்திய யண்ணல் சடையன்
திருநீடூரமர் சோமகந்தன் - வேயுறு
தோளியம்பிகை தமை காரணாகம விதி
வழி போற்றி தஞ்சாப மறுபட்ட அருணனே
வேங்கை கதிர் பாய நின்றே’’

எனப் போற்றுகின்றார். ஆம். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதமான சூரியன் ஆதிக்கங் கொண்ட இத்திங்களில், சுவாமி மீது சூரிய ஒளி விழுகி ன்றது. நவகிரகங்கள் இல்லாத கோயில் இது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, ‘ஒன்பது தீர்த்தம்’ என்றே போற்றப்படும்  புஷ்கரணி இங்குண்டு. நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களையும் விலக்கும் திறன் கொண்ட புஷ்கரணி. சிவயோகர் தமது நூலில்,

‘‘மந்தனும் பருதியும் இன்னபிற
கோளால் கூடும் தோசப்பீடை
கருக்க இம்மேதினியிலே நவ
தீர்த்தமதனிலே நீராடி யெழு’’

என்றார். பற்பல கோயில்களில் பற்பல பூசை புரிந்தும் பயனின்றி போனாலும் சோர வேண்டியதில்லை. இங்குள்ள ஒன்பது தீர்த்த மெனும்  புஷ்கரணியில் நீராடி, இறைவனைத் தொழ விலகும் கோளால் எழுந்த பீடையே என்று பொருள். எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, பின் பெரியோர்களின் ஆலோசனைப்படியே  காரியங்களில் ஈடுபடவேண்டும் என்பது நியதி. அதன்படி, இப்புண்ணிய தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற மூன்று  நிலைகளில் நிற்கின்றார். 

இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அழைத்தனர் சித்தர் முது மக்கள். படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும் இம்மூன்று அம்சங்களையும் தியானித்தே தம் பணியில் கவனம் செலுத்து கின்றனர். எனவே, நாமும் இதனைப் பின்பற்றி செயல்பட்டால், குறைநீங்கி இன்பம் பெற ஏதுவாகும். இதனையே சிவஞானயோகியார்,

‘‘மும்மூர்த்தியர் தமக்கிணையான
சிந்தாமணிச் செல்வ மகாசிவானந்த
கணநாதரைத் தொழுதே எக்கருமமுந்
தோற்ற ஜெயமுண்டு பயமில்லை
யறிவீர் உலகத்தோரே’’
என்றார். 

காலை நேரத்தில் சிவபூசை புரிவது அவசியம். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படாது போக, காவிரி ஆற்றின் மணலில்  ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர  பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், ‘கான நர்த்தன சங்கரா’ எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வழிபட்டான். அன்று தொட்டு இந்த  சோமநாதப்பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில்  விரதமிருந்து தொழுபவர்க்கு, உடம்பில் உள்ள மச்சம் மறையும்; மாறாத வடு மாறும். தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள்  யாவுமே மறைந்தோடி வனப்பு பெறுவர். 
இதனை பாம்பாட்டிச் சித்தர்,

‘‘நஞ்சால் நேர்ந்த சரும ரோக
நிவாரணஞ் செய்குவன் - நர்த்தனச்
சங்கரனார் குட்டமெனும் ரோகந்தனையு
நீக்குமருத்துவ னென்று போற்றுவீரே’’

என்றே பேசுகிறார். பாம்பைப் போல, தனது ஆத்ம சக்தியை ஆட்டி பாம்பாட்டி என்ற பெயர் பெற்ற சித்தர் அருள் பெற்றது இத்திருத் தலத்தில் தான். மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காண, வியப்பு மேலிடுகிறதன்றோ? உற்சவருக்கு  சோமாஸ்கந்தர் என்று பெயர். மனதிற்கு பிடித்த மணவாளன் அமையவும், அமைந்த கணவரின் உறவினர்கள் தன்னோடு இன்புற்று இருத்தலுமே ஒரு பெண்ணிற்கு இன்பம் தருவது.  இதனை சிறிதும் குறையின்றி செய்யும் அப்பன், இந்த சோமாஸ்கந்தர்.

‘‘சோமகந்தரைச் சரணஞ்செயும்
பாவையர் தம் மனத்து சிம்மாசனம்
செய வீற்றிருக்க வைப்பான் மணவாளந்
தனையே - அவர்தங் குலத்தோரும்
மாட்டுப் பெண்ணை அகமிக மகிழச்
செயவே மகிழமென வடிவு தாங்கி
மாங்கல்யதாரண தேவதை நிற்க மெய்மையோதினமே’’ 

- என்றார் தேவனார். சிவயோக சித்தரான இவர் திருமாங்கல்ய பலம் தரும் தேவதை, மாங்கல்ய தாரண தேவதையான இவளே இத்திருத்தலத்து வி ருட்சமான ‘மகிழ’ மரமாகவும் நிற்கின்றாள் என்கிறார். இந்த விருட்சத்தை தொழுதக்கால், பூரிப்பெய்தி மகிழ்வான இல்லறம் கிடைக்கும் என்கிறது சி த்தர் தம் வாக்கு. 
காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சக்தி படைத்த கோயில் இது. சுயமாகத் தோன்றிய மூர்த்தி, இந்த சோமநாதசுவாமி. இவர் கொலு விருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும். நடராஜப் பெருமான் சுதை வடிவில் அமைந்தமை மெத்த சிறப்புடைத்தது. 

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் கொடுவினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்ட, அவரும் சோமநாதரைச்  சரணடைய பணித்தார். அவ்வழியில் சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை  இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது. இதனையே அகத்தியன்,

‘‘கடக வடிவு நின்ற தன்மசுதனை தன்னுள்
கூட்டிய சோமேசன் - தன்னை சரணடைய
நிற்போர் தம் ஊழறுபடுஞ் சொன்னோம்
காளிகாம்பாள் தொழுதேத்திய மூர்த்திதமை
கை தொழுவாருக்கு இலை யாதொருவைரியரே’’       

எனப் பேசுகின்றார். பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள். அன்னை பத்ரகாளியை தொழுபவர்க்கு எதிரிகள் இல்லை; மந்திர 
தந்திர வித்தைகள் சித்தியாகும் என்கிறது ஒரு பழம் பாடல். தெரிந்து அல்லது தெரியாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக விளங்குபவர் இந்த ஈசன். எந்த ஒரு நோயும், தொல்லையும், நாம் செய்யும்  பாவங்களினால்தான் வருகின்றது என்கிறது சித்தர் தம் வாக்கு. அத்தோஷங்கள் விலக, நோய், தொல்லை, கஷ்டம் யாவும் இந்த சோமநாதரைத்  தொழுதால்  விலகும். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது இந்த நீடூர் கோயில்.

No comments:

Post a Comment