Monday, 21 April 2014

BEEMAN AMAVASAI VRATHAM STORY

முன்னொரு காலத்தில், சௌராஷ்டிர தேசத்தில், தேவசர்மா என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கங்கா என்ற பெயரில், அழகான ஒரு மகள் இருந்தாள். வயது முதிர்ந்த அந்த அந்தணர், காசி யாத்திரை செய்யத் தீர்மானித்தார். அக்காலத்தில் காசி யாத்திரை சென்று வர பல காலம் ஆகும். திரும்பி வருவது என்பதும் இறையருள் இருந்தால் தான் நடக்கும். 

இப்படியிருக்க, தம் இளவயது மகளை தம்முடன் அழைத்துச் செல்வது இயலாது என்பதால், திருமணம் முடிந்து தனியே வசிக்கும் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காசி  செல்லத் தீர்மானித்தார். அவ்வாறே, தம் மகளை, மகனிடம் ஒப்படைக்கும் போது, சிறிது பணமும் நகைகளும், உடைமைகளும் கொடுத்து, ஒரு வேளை தான் திரும்ப வராவிட்டால், அவற்றை, அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு உபயோகிக்குமாறு கூறிச் சென்றார். 

அவர் சென்று ஒரு வருடமாகியும் திரும்ப வராததால், அவரது மகனும் மருமகளும் கவலை கொண்டனர். அந்தணர் வராதது குறித்த கவலையில்லை அது. தங்கைக்கு தக்க இடம் பார்த்து மணம் செய்ய வேண்டுமே என்பதே அந்தக் கவலை. மகனுக்கு, தந்தை கொடுத்துச் என்ற பணத்தையும் பிற உடைமைகளையும் தானே எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மீறியது. 

இந்த நிலையில், அவன் விநோதமான ஒரு அறிவிப்பைக் கேட்க நேர்ந்தது. அந்த நாட்டின் அரசனின் மகன்(இளவரசன்) திடீரென இறந்து விட்டதால், அவனை மணந்து, அவனோடு உடன்கட்டை ஏறுவதற்காக, ஒரு பெண் வேண்டுமெனக் கேட்டு அறிவிப்புச் செய்திருந்தான் அந்நாட்டு மன்னன். அக்கால வழக்கப்படி, மனைவி உடன்கட்டை ஏறினால், கணவன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்பது நம்பிக்கை. 

யாரும் தங்கள் மகளை இந்தக் கொடூரத்திற்கு பலியிடத் துணியவில்லை. பேராசை பிடித்த அண்ணனும் அண்ணியும்  கங்காவை அழகாக அலங்கரித்து, அரசனிடம் ஒப்படைத்தனர். இந்தச் செயலுக்கு வெகுமானமாக  கங்காவின் எடைக்குச் சமமான தங்கமும் அவனுக்குத் தரப்பட்டது. கங்கா, தன் விதியை எண்ணி நொந்து அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. 

தன் தந்தையிருந்தால், இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்று எண்ணி மனம் புழுங்கினாள் அவள். கங்காவுக்கும் இறந்த இளவரசனுக்கும் திருமணம் நடைபெற்றது. உடன், இளவரசனின் உடலும் பாகீரதி நதிக்கரைக்கு அருகிலிருந்த‌ மயானத்திற்கு ஊர்வலமாகச் சென்றது. கங்காவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டாள். 

திடீரென்று பெருமழை பொழியத் துவங்கியது. வெகு நேரமாகியும் மழை விடாததால், அனைவரும், மயானத்திலிருந்து செல்லத் துவங்கினர். அரசனும், மறுநாள் வந்து எரியூட்டலாம் என்று தீர்மானித்து, கங்காவையும் தன்னுடன் வருமாறு அழைத்தான். ஆனால் கங்காவோ வர மறுத்து, தன் இறந்த கணவனின் சடலத்துடன் அங்கேயே இருக்கத் தீர்மானித்தாள். 

அரசனும் அவளை அங்கேயே விட்டுவிட்டு அரண்மனைக்குச் சென்றான். இரவு முழுவதும் கங்கா அங்கேயே இருந்தாள். மறுநாள் விடிகாலை, ஆடி அமாவாசை புண்ணிய தினம். அன்று தன் பெற்றோர்கள் அனுசரிக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கங்காவுக்கு நினைவு வந்தது. 

இக்கட்டான நிலையில் இறைவனைத் தவிர துணையேதுமில்லை என்று உணர்ந்த அவள், இந்த நிலையிலிருந்து மீள, தானும் அந்த விரதத்தைச் செய்து இறைவனை வேண்ட முடிவெடுத்தாள். உடனே அவள், அருகிருந்த பாகீரதி நதியில் நீராடி, நதிக்கரையிலிருந்த களிமண்ணை எடுத்து, இரு விளக்குகள் செய்தாள். 

அருகிலிருந்த, எண்ணையின் உதவியில்லாமல் எரியக்கூடிய ஒரு வித மரத்தின் வேரை எடுத்து வந்து, சிக்கிமுக்கிக் கல்லின் உதவியால் தீபமேற்றினாள். அந்த இரு தீபங்களிலும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து, தன் தாயார் அனுசரிக்கும் முறைப்படி பூஜை செய்தாள். 

நிவேதனம் செய்ய எதுவும் இல்லாத சூழலில், களிமண் உருண்டைகளையே கொழுக்கட்டை போல் செய்து நிவேதனம் செய்தாள். விரதத்தின் முக்கிய அங்கம், நிவேதனம் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை, ஆண்கள் யாராவது, தம் முழங்கையினால் உடைக்க வேண்டும். 

அவ்வாறு செய்வதற்கு அங்கு யாரும் இல்லை. அப்போது ஒரு அழகிய இளம் தம்பதியர் அந்த இடத்திற்கு வந்தனர். மயானத்தில் தன்னந்தனியாக பூஜை செய்து கொண்டிருக்கும் கங்காவைக் கண்டு, அவள் கதையைக் கேட்டு, அவள் நிலையைக் கண்டு இரங்கினர். 

பிணமாகக் கணவன் கிடந்த நிலையிலும் இறை நம்பிக்கையை விடாது, 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்று உளமார வணங்கித் துதிக்கும் அவள் பக்தி, அந்த இளம் தம்பதியை உருக்கியது. தம்பதியருள், அந்த இளம் கணவன், கங்கா தயாரித்திருந்த களிமண் உருண்டைகளை உடைக்க ஒப்புக் கொண்டான். 

அவ்வாறே செய்து, அவளை, 'தீர்க்க சுமங்கலி பவ' என்று வாயார வாழ்த்தினான். கங்கா, அவன் வாழ்த்தினைக் கேட்டு வியந்தாள்.  'இது எப்படி சாத்தியம்?' என்று கேட்டாள். அந்த இளம் தம்பதியர் அவளை நோக்கி, 'நீ உன் கணவனை ஏன் எழுப்பாமல் இருக்கிறாய்?, சென்று எழுப்புவாயாக'. என்று கூறினர். 

எதுவும் புரியாமல், கங்காவும், தன் கணவனை எழுப்பினாள். என்ன ஆச்சரியம்?!!. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. இறந்த இளவரசன், தூக்கம் கலைந்து எழுபவனைப் போல் எழுந்தான். நடந்தவற்றை கங்காவின் மூலம் அறிந்த இளவரசன், தனக்கு உயிர் தந்த இளம் தம்பதியைத் தேடிய போது அவர்கள் அந்த இடத்தில் இல்லை. 

எல்லாம் சிவனருளால் நிகழ்ந்ததென்று உணர்ந்து, தம்பதியர் மகிழ்ந்தனர். அப்போது அங்கு வந்த அரசனும் மகிழ்ந்து, இறையருளைப் போற்றி, தம்பதியரை, தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அன்று முதல், அந்நாட்டிலுள்ளோர் அனைவரும் இந்தப் புண்ணிய விரதத்தைச் செய்யலாயினர். 

No comments:

Post a Comment