Saturday 26 April 2014

ஆண்டவன் படியளப்பான்

ஒரு ஊரில் ஒரு விவசாயி தன் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தான். ஏழையாக இருப்பதே சுகம் என்ற கொள்கையுடையவன் அவன். வாங்கும் கூலிக்குள் வாழ்க்கை நடத்துவான். அவனது மனைவியோ நேர் எதிர். பொன்னோடும், பொருளோடும் வாழ்ந்தால் தானே உலகம் மதிக்கும் என்று சொல்வாள். கணவனுக்கு அவள் எவ்வளவோ புத்திமதி சொன்னாள். அவனோ வேதாந்தம் பேசுவான். நீ எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படாதே. நான் இறந்தாலும், நம் குழந்தைகள் உன்னைக் காப்பாற்றுவார்கள்.அவர்கள் வளரும் வரை நீயே பொருளீட்டி காப்பாற்ற வேண்டும், என்பான். இவர்கள் வீட்டு பிரச்னை வைகுண்டத்திற்குச் சென்றது. லட்சுமிதேவி நாராயணனிடம்,சுவாமி, என்னை அடைய முற்றும் துறந்த முனிவர்கள் கூட ஆடம்பர யாகங்களைச் செய்கிறார்கள். ஆஸ்ரமங்களில் ஆடம்பரமாய் வாழ்கிறார்கள்.

இவனுக்கு என்ன வந்தது? என்றாள். நாராயணன் சிரித்தார். லட்சுமி! எவனொருவன் ஆசையைத் துறந்து விட்டானோ, அவன் நிரந்தரமாக எனது திருவடியை அடைவான். இதைத்தானே நான் கீதையில் ல்லியிருக்கிறேன். வேண்டுமானால் அவனைச் சோதித்துப் பாரேன், என்று சொல்லிவிட்டு அனந்தசயனத்தில் ஆழ்ந்து விட்டார். லட்சுமி அவன் வீட்டுக்குள் இரண்டு புத்தம் புதிய சட்டைகளைக் கொண்டு வைத்தாள். மறுநாள் காலையில் எழுந்த அவன் மனைவி சந்தோஷப்பட்டாள். என்னங்க! இதை இன்று போட்டுக்கங்க! கடவுளா பார்த்து கொடுத்தது! நீங்க எதுவும் வேண்டாமுனு சொன்னாலும், லட்சுமி நம்மைத் தேடி வந்திருக்கா! என்றாள். விவசாயி மறுத்து விட்டான். இது யாருடையதோ தெரியாது. உழைப்பவர்க்கே கடவுள் பொருளைத் தருவார். உழைக்காமல் கிடைக்கும் பொருள் நிலைக்காது, என்று சொல்லிவிட்டு போய் விட்டான். அன்று அவன் நிலத்தை உழுத போது, கலப்பை ஓரிடத்தில் இடித்தது. அவன் அந்த இடத்தை தோண்டவும், உள்ளே ஒரு பெரிய தங்கக்கட்டி இருந்ததைப் பார்த்தான். அதைக் கண்டு கொள்ளாத அவன், மீண்டும் மணலைப் போட்டு மூடி விட்டு உழ ஆரம்பித்து விட்டான்.இதற்குள் குறிசொல்பவள் போல் வேடமணிந்த லட்சுமி, விவசாயியின் மனைவியிடம் வந்து, உன் கணவன் வலிய வந்த சீதேவியை விரட்டி விட்டான். தங்கக்கட்டியை எடுக்காமல் வந்து கொண்டிருக்கிறான். அதை எடுத்து வரச்சொல்லி, உன் குடும்ப வறுமையைப் போக்கு, என்றாள்.

விவசாயி வந்ததும் அதைப்பற்றி விசாரித்தாள் மனைவி. அவனும் தங்கக்கட்டியைப் பார்த்ததாக ஒப்புக்கொள்ளவே, அதை எடுத்து வரும்படி அவனை நச்சரித்தாள். விவசாயி அவளிடம், நான் அதை எடுத்து வந்தால் உறவினர்கள் நம்மைத் தேடி வருவார்கள். நண்பர்கள் ஆயிரம் பேர் சேருவார்கள். நம்மிடம் பாசம் காட்டுவார்கள். பொருள் தீர்ந்ததும் போய் விடுவார்கள். அந்த நேரத்தில் நம் இதயம் வலிக்கும். அது மட்டுமல்ல! பொருள் இருக்கும் இடத்திற்கு திருடர்களும் வருவார்கள். நாம் அவர்களைத் தடுத்தால், உயிரையே எடுத்து விடுவார்கள். ஒருவனது அன்றைய உணவுக்கு அவனது உழைப்புக்கேற்ப ஆண்டவன் படியளப்பான். நீ ஆசைப்படாதே, என்றான். அப்போது நாராயணனும், லட்சுமியும் அவர்களுக்கு காட்சியளித்தனர். அவனது ஆசையின்மையை பாராட்டினர். செல்வத்தை வெறுத்த விவசாயி குடும்பத்துக்கு யாருக்கும் கிடைக்காத பெருஞ்செல்வமான தெய்வ தரிசனம் கிடைத்தது.



No comments:

Post a Comment