Saturday 26 April 2014

பதிவிரதை உஷா

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நந்தக ரிஷி என்ற தவசீலர் வாழ்ந்து வந்தார். அவருக்கு உஷாஎன்ற பேரழகுவாய்ந்த மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். தினமும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்களை பறித்து மாலையாக்கி பக்தியுடன் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு சாத்தி, புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தாள். அவள் திருமண பருவத்தை அடைந்த போது, ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள காட்டில் வேட்டையாட வந்த அரசிளங்குமரன் அவளைப் பார்த்தான் இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள்.கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டுவிட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.

ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், இளவரசன் அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா?இளவரசனும் உஷா மீது சந்தேகங்கொண்டான். அவளைக்கடிந்து பேசினான்.தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி அவள் வேதனையடைந்தாள். தந்தையின் வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, உண்மை ஒரு நாள் வெற்றிபெறும், என தேற்றினார். மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பைகளங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதி நூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதல்லவா?அதன் பலனாக விரைவிலேயே இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர்.உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்த தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது.

அவளது மனம் துடித்தது அவன் தனக்கு செய்த துரோகத்தை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள். பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார்.அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயரூபம் காட்டினார். மனைவிக்கு செய்த துரோகத்தாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன் உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான்.ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.



No comments:

Post a Comment