Saturday, 26 April 2014

VARAM THARUM VARADARAJA PERUMAL, NALLAATHUR

PUதுச்சேரி அருகேயுள்ள நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோயில் வரப்பிரசாதியான பழமையான கோயிலாகும். வருடா வருடம் ஆண்டாள் கல்யாணமும், சீதா கல்யாணமும் வைபோகமாக நிகழ்த்தப்படுகிறது. இந்த வருடமும் 9.4.2014 அன்று விமரிசையாக ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது. மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சந்நதி புறப்பாடும் அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என நிகழ உள்ளன. 

இந்நிகழ்ச்சிகளின் பிரதான அம்சமே ராமர்- சீதை காப்புக்கயிறு கட்டிக் கொள்வதுதான். அதாவது, திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண், பெண் இருபாலாரும், இக்கோயிலில் சீதா திருக்கல்யாணத்தை ஒட்டி 11.4.2014, வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் முடியும் என்பது நீண்ட கால நம்பிக்கை. அன்று காலை 8 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள். புதுச்சேரி -கடலூர் வழியில் தவள குப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி - விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

சனி தோஷம் அகல

சனி கிரக தோஷத்தால் அவதியுறுபவர்கள் திருநாகேஸ்வரம் சமீபத்தில் உள்ள உப்பிலியப்பன் பெருமாளை வணங்கி பிரார்த்திக்க, அதிலிருந்து விடுபட முடியும்.

பதவி உயர்வு பெற 

திருத்தணியிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள நல்லாட்டூர் திருத்தலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு முறைப்படி பூஜை செய்வோர் உயர் பதவியை அடைவார்கள்.

கடன்கள் தீர 

கடன் வாங்கி அடைக்க முடியாத வர்கள்  நாடி வேண்ட வேண்டிய திருக்கோயில் பெங்களூர் விஸ்வேஸ் வரபுரத்தில் இருக்கும் பெரிய முருகன் கோயிலில் உள்ள, தனிச் சந்நதி கொண்டுள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை புரிய, கடனிலிருந்து அவர்கள் விடுபட இயலும்.

ஞாபக சக்தி பெருக 

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் என்ற இடத்தில் (பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ.) கேம் பிரிட்ஜ் பள்ளிக்கு சமீபம் அமைந்துள்ள ஆலயத்தில் அன்னை காயத்ரி கொலு வீற்றிருக்கிறாள். தங்கள் ஞாபக சக்தி அபரிதமாக, அந்தக் கோயில் சென்று விசேஷ ஆராதனை, பூஜை புரிய அப்பேறு கிடைக்கும்.

கோரிக்கைகள் நிறைவேற 

பிறருக்கு பாதிப்பில்லாத நல்ல கோரிக்கைகளைக் கொண்டோர், அவை நிறைவேற நாட வேண்டிய திருக்கோயில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பீடமாகும். அங்கு சென்று சிறப்பு பூஜைகளை அம்மனுக்கு செய்துவிட்டு பின்பு சில ஏழைகளுக்கேனும் அன்னதானம் புரிய நற்பலன் கிட்டும்.

கும்பகோணம் : கும்பகோணம் அடுத்த அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் காலபைரவர் அஷ்டமி பெருவிழா நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான 88 கோயில்களில் ஒன்றாக விளங்குவது அம்மாச்சத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயில். இக்கோயிலில் உள்ள பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தல சுவாமிக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது.

இத்தலத்தில் அம்பாள் ஸ்ரீஞானம்பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் எழுந்தருளியிருப்பது  சிறப்பாகும். எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக சக்கரம் உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும்.

இப்பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்த கோயிலில் காலபைரவர் அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. விழாவினையொட்டி சுவாமி, அம்பாளுக்கு அபிஷேம் நடைபெற்றது. பின்னர் மாலை காலபைரவருக்கு ருத்ராபிஷேகம், மகா தீபாராதனை, சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கால பைரவர் வழிபாட்டு குழுவினரும் செய்திருந்தனர்.

செந்தலை

அனந்தகோடி கல்யாண குணங்கள் கொண்ட பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவை ஆழ்வார்களும், மகான்களும், ரிஷிகளும் நேரில் கண்டுகளித்தனர். நம்மைப் போன்றவர்கள் வணங்கி அருள் பெற இப்பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன் சில தலங்களில் அர்ச்சாரூபமாய் விளங்கி சேவை சாதிக்கின்றார். அதில் செந்தலை எனும் இத்தலமும் ஒன்று. கிருத யுகத்தில் பிரம்மாவும், துவாபர யுக ரிஷிகளும், பிருகத் தச்சனும், கலியுகத்தில் சந்திரலேகை என்ற தேவதாசியும் பூஜித்துள்ளனர்.

இது  பிரம்மான்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப் படுகிறது. ஆதிகாலத்தில் சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி  செந்தலை என்று மாறிவிட்டது. இக்கோயிலில் ஸ்ரீ பரிமளவல்லி தாயார் சமேத ஸ்ரீஅனந்த பத்மநாப பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு சமயம் ஸ்ரீ அனந்த பத்மநாப பெரு மாள் தனக்கு தாகம் ஏற்பட்ட போது அதனை தீர்க்க ஆதி சேஷனை ஏவினார். பெருமாளின் மேற்கு புறத்தில் ஆதிசேஷன் பூமியை கொத்தியபோது தண்ணீர் பொங்கி வந்தது. அதிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து பெருமாளின் தாகம் தீர்த்தார், ஆதிசேஷன்.

அந்த இடத்தில் இன்றும் தீர்த்தக் கிணறு உள்ளது. இது அனந்த கிணறு என்று வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் ஆதிசேஷன் உடல் மீது இல்லாமல் ஜபக் கோலத்தில் தவம் மேற்கொண்டு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் பெருமாள் 7 அடி 9 அங்குல உயரத்தில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் 5 அடி 11 அங்குல உயரத்திலும் அமைந்துள்ளனர். ஸ்ரீ பரிமளவல்லி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜ கோபுரம் 25அடி அகலமும், 60 அடி உயரமும் உடையது.
மூலவரின் சந்நதி கிழக்கு முகமாக அமைந் துள்ளது. முதல் மண்டபத்தில் சொர்க்க வாசல், கருடாழ்வார், மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், மணவாளர், உடையவர் சந்நதிகளும், இரட்டை நாகம் கொண்ட சிவ ஸ்வரூபம், நர்த்தன கிருஷ்ணர் போன்றவையும் உள்ளன. பெருமாளின் திருத்தொண்டர்களில் ஒருவரான விஷ்வக்சேனர் சேனை முதலியார் என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் விநாயகருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இவருக்கு இங்கு தரப்படுகிறது. இவரை வணங்கிவிட்டு தான் பெருமாளை வழிபட வேண்டும்.

இக்கோயிலில் அமைந்துள்ள அனந்த கிணற்றில் குளித்து பெருமாளை தரிசனம் செய்தால் நாகதோஷம் நீங்குகிறது. மழலை பாக்கியம் கிட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி அன்று நாகம் ஒன்று கருடபகவான் மீது அமர்ந்து தரிசனம் தந்தது. அதனை விரட்ட கோயில் நிர்வாகிகள் முற்பட்ட போது ஒரு பெண்ணிற்கு அருள் வந்து 'நான் அர்த்தஜாம பூஜை வரை இங்கு இருப்பேன்' என்று கூறினார். இதனை ஏற்று இரவு பால்வைத்து வழிபட்டு கோயில் கதவை சாத்தி சென்றனர். மறுநாள் நாகம் சட்டை உரித்து சென்றது மட்டுமே காணப்பட்டது.

இக்கோயிலில் ஆடிப் பூரம், நவராத்திரி, தனுர் மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, அட்சய திருதியை போன்ற வைபவங்கள் விசேஷமாக நடைபெறும். கி.பி. 6 மற்றும் 7ம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக இது திகழ்ந்துள்ளது. சமீபத்தில்தான் மிகச் சிறப்பான முறையில்  கும்பாபிஷேகம் நிகழ்ந்தேறியது. ஆலயத் தொடர்புக்கு 94432 87288. தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டத்தில் திருக்கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் பசுமையான வயல்கள், தென்னந்தோப்புகளுக்கிடையே இத்தலம் அமைந்துள்ளது.

SOOLAMANGALAM, TANJORE
சகல சவுபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம் தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தை அமாவாசையையொட்டி நடைபெறும் சூலவிரத சிறப்பு வழிபாடு பிரசித்தி பெற்றது ஆகும். சகல விதமான சவு பாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூலவிரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்து கொண்டு அபஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.

பிறகு மதியம் வேளையில் திருநீறு, ருத்ராட்ச மாலைகளை தரித்த சிவ பக்தர்களுக்கு தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான தர்மம் செய்ய வேண்டும். அதன் பின் சிவாலயத்திற்கு சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து திருக்கோவிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி இறைவனை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். இப்படி இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்க ஆயுள், புத்திர செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அடைந்து சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள்.

தோஷ நிவர்த்தி பெறுவார்கள். இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். ஆகையால் தவ சீலர்களே சகல பாவங்களையும் வேரோடு அழிக்க வல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பை பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயம் இராது.

சூலமங்கை தலம் அமைந்துள்ள இடம் 

கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்று பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால் வெகு சமீபத்தில் உள்ள சூல மங்கலம் என்னும் இவ்வூர் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்கார வள்ளி உடனுறை ஸ்ரீ கிருத்திவாசேஸ்வரர் திருக்கோவிலே சூல மங்கை என்பதாகும். சூல மங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று. இப்போது மருவி சூலமங்கலம் என்று விளங்குகிறது. இக்கோவில் தலம் (சூலமங்கை) மூர்த்தி (கிருத்திவாசர்) தீர்த்தம் (சூல தீர்த்தம்) என்னும் 3–ம் கொண்டுள்ளது.

சூலமங்கை தலத்தின் சிறப்பு 

அஸ்திரதேவர் (சூல தேவர்) வழிபட்டு திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்க தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம். சப்த மங்கையரில் சூல மங்கை வழி பட்ட தலம். பெரிய சிவாலயம், கல் திருப்பணி, ஊரின் பெயருக்கேற்றவாறு கோவில் வெளி வாயிலின் புறத்தில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார். அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று இத்திருக்கோவிலில் விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை மெழுகிட்டு கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னம் பாலித்தல், தான தர்மங்கள் செய்தல், திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், தினசரியோ, வார நாட்களிலோ தவறாது திருக்கோவிலுக்கு செல்லுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்தல் போன்ற திருப்பணிகளை செய்வோமாயின் உலகத்தில் யாவரும் செய்திராத தவப்பயனும்,  ஒப்பற்ற யாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிட்டுவதுடன், சிவ பெருமானின் அனுக்கிரக பார்வையில் நாம் இருந்து அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று சிவானந்த பெரு வாழ்வு வாழலாம் என்பது திண்ணம். 


நெமிலிச்சேரி

நெமிலிச்சேரி பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த தொன்மையான கிராமம். நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று பொருள். நெமிலிகள் (மயில்கள்) அதிகமாக இருந்ததால் நெமிலிச் செருவு என்று அழைக்கப் பெற்று, நாளடைவில் அது நெமிலிச்சேரியாக மாறிற்று. இப்படியான பெயர் KA
ரணத்தோடு விளங்கும் நெமிலிச்சேரியில் ஆனந்தவல்லி சமேதராக அகஸ்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 950 ஆண்டுகளுக்கு முன் பதினெண் சித்தர்களில் ஒருவரான அகத்தியரால் உருவான ஆலயம் இது.

அன்றைய நாளில் நான்மறைகள் முறையாக ஓதப்பட்டு வழிபாடுகள் சிறப்பாக நடந்ததற்கு சான்றுகள் உள்ளன. பல்லவபுரமானது, வானவன் தேவி சதுர்தேவி மங்கலம் என்ற பெயரில் இருந்ததாக 11ம் நூற்றாண்டை ஒட்டிய சோழர் காலத்து கல்வெட்டு குறிப்பு ஒன்று கூறுகிறது. இன்னும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் அதற்கான கல்வெட்டு ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. பல சித்தர்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். நெமிலிச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு 1930ம் ஆண்டில் வாழ்ந்த கோடர் முனுசாமி என்பவர் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கிறார்.

இந்த ஆலயத்தில் நந்தி மண்டபம், விநாயகர் மண்டபம், மகா மண்டபம், சூரியன், பைரவர், நவகிரகங்கள், கோஷ்ட தெய்வங்கள் என சிவாலயத்திற்குரிய எல்லா சந்நதிகளும் அமையப்பெற்றுள்ளன. கருவறையில் எழுந்தருளியிருக்கும் அஸ்தீஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அகஸ்தியர், சித்த மருத்துவ முறைகளை வகுத்தவர்களில் தலையானவர். ஆயுர்வேத சூத்திரங்களுக்கு விரிவாக உரை எழுதியவர் அவர்.

அத்தகைய சிறப்புக்குரிய இவர் மக்கள் பலன் பெறும் வகையில் வெவ்வேறு நோய்களை குணமாக்கும் சக்திவாய்ந்த சிவ ஆலயங்களை தன்னுடைய யோக சக்தியால் உருவாக்கி பிரதிஷ்டை செய்திருக்கிறார். எப்படி  போகர் சித்தர் நவபாஷாணத்தாலான பழநி ஆண்டவரை உருவாக்கினாரோ அதுபோல அகத்தியர் இந்த சிவலிங்கத்தை பிரத்யேகமான  முறையில் உருவாக்கி இருக்கிறார். நோய்களை தீர்க்கவும், தடைகளை தகர்க்கவும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்ற நெமிலிச்சேரி  அகஸ்தீஸ்வரரை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுவோமாக!

சென்னை - குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கிழக்குப் பக்கம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நெமிலிச்சேரி அமைந்துள்ளது.  
Jan M

No comments:

Post a Comment