Thursday, 17 April 2014

SMALL DEVOTIONAL STORIES

  யார் இந்த முருகன்?
  பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர் எவ்வித ஆசையும் இல்லாதவர். மகாஞானி. அவர் ஆசையே இல்லாதாவரா என்பதை சோதித்தறிய பார்வதிஆசைப்பட்டாள். சிவனும் ஒப்புக்கொண்டார்.
  அவர்கள் சனத்குமாரர் முன் தோன்றினர். சனத்குமாரர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
  ""நான் ஒன்றும் இவர்களை நினைத்து தவமிருக்கவில்லையே! எதற்காக இங்கே வந்தார்கள் என்று எண்ணியவர், அவர்களிடம் பேசக்கூட இல்லை. அவரிடம் கோபத்துடன் பேச்சைத் தொடங்குவது போல் நடித்தார் சிவன்.
  ""ஏ சனத்குமாரா! நீ மகாஞானியாக இருக்கலாம். அதற்காக, லோகமாதா பிதாக்களான எங்களையே அவமதிக்கும் அளவு உனக்கு கர்வமா? வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து உபசரிக்கும் பண்பு கூட உன்னிடம் இல்லையே!
  சனத்குமாரர் எதற்கும் அஞ்சாதவர். அருமையாகப் பதிலளித்தார்.
  ""உலகில் எல்லாரையுமே கடவுளாகப் பார்ப்பவன் நான். நீங்களும் அதில் ஒருவர். உம்மைக்கண்டு என் உடல் வேண்டுமானால் அச்சப்படலாம். ஆனால், ஆத்மா நடுங்காது, என்றார்.
  ""சரி...போகட்டும், ஏதாவது வரம் கேள், தந்து விட்டு போகிறேன், என்றார் சிவன்.
  இதற்கும் சனத்குமாரர் அஞ்சாமல் பதிலளித்தார்.
  ""எனக்கு எந்த வரமும் தேவையில்லை. வேண்டுமானால், என்னிடம் நீர் ஒரு வரம் கேளும். உமக்கு வேண்டுமானால், நான் தருகிறேன்,.
  ""அப்படியா! நீ என் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்,.
  ""அவ்வளவுதானே! ஆனால், வரம் கேட்ட நீர் மட்டுமே என்னைப் பெற வேண்டும். இதோ! உன் அருகில் நிற்கும் இந்தத்தாய் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஒருவர் கேட்காமல் ஒன்றைக் கொடுக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே, தாயின்
  சம்பந்தமில்லாமல் நான் பிறக்க வேண்டும்,.
  இதுகேட்ட பார்வதி பதறினாள்.
  ""சனத்குமாரா! இது நியாயமல்ல. என் கணவர் ஒன்றைக் கேட்கிறார் என்றால், அது என்னையும் உத்தேசித்து தான். கணவருக்குள் மனைவி அடக்கம் என்பதை அறிவாய் அல்லவா?
  ""ஒப்புக்கொள்கிறேன்... அதற்காக நான் நேரடியாக உன் வயிற்றில் பிறக்கமாட்டேன். ஒரு காலத்தில் பஸ்மாசுரனுக்கு சிவன் ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, அவன் யார் தலையில் கை வைக்கிறானோ, அவன் பஸ்பமாகி விடுவான். அவன் சிவனையே சோதிக்க வந்தான். அவர் மறைந்து விட்டார். அந்தக்கவலையில், நீ தண்ணீராய் உருகிப்போனாய். அதுவே சரவணப்பொய்கை. அதற்குள் உன் கணவர் என்னைக் கிடத்தட்டும். அப்படியானால், உ<ன் ஸ்பரிசமும் எனக்கு கிடைத்தது போல் ஆகிவிடும். சரிதானே! என்றார்.
  பார்வதி சம்மதித்தாள். இருவரும் மறைந்தனர்.
  இதுபற்றி தந்தை பிரம்மாவிடம் கேட்டார் சனத்குமாரர்.
  ""குமாரா! நீ முற்பிறப்பில், தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்துவது குறித்து வேதங்களில் இருந்து தெரிந்து கொண்டாய். அப்போதெல்லாம், அந்த அசுரர்களை அழித்து விடமாட்டோமா என மனம் கொதிப்பாய். அதன்படி, இப்போது பத்மாசுரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அழிக்க சிவன் உன்னைப் பயன்படுத்தப் போகிறார். எதை நினைக்கிறோமோ அதுவாகவே
  நாம் மாறுகிறோம் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள், என்றார்.
  இந்த சனத்குமாரரே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து, தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். சூரபத்மனைக் கொன்றார். உடை மீது கூட ஆசை இல்லாமல், பழநியில் கோவணத்துடன் அருள்செய்கிறார்.
  இந்தக்கதை "திரிபுரா ரகஸ்யம் என்ற கிரந்த நூலில் உள்ளது.
  -பரணிபாலன்
  
  திருப்பாணாழ்வார்
  திருச்சி உறையூரில் வசித்த பாணர் ஒருவர், ஸ்ரீரங்கத்தில் துயிலும் ரங்கநாதனையே எப்போதும் சிந்திபார். யாழ் மீட்டிபண் இசைத்துப் பாடுவார். ஸ்ரீரங்கத்தில் நுழையும் போது, "ஐயோ! என் கால் இந்த புண்ணிய பூமியில் படுமே. அந்தளவுக்கு என் கால்களுக்கு தகுதியில்லையே! என்று உருகுவார்.
  ஒருநாள், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து லோகசாரங்க முனிவர் என்பவர் தீர்த்தக் கைங்கர்யத்திற்காக (அபிஷேகநீர் எடுக்க) காவிரிக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் பாணர் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட லோகசாரங்கர், "என்னைத் தீண்டி விடாதே! தூரப்போ! என்று திட்டி விரட்டினார். பயந்து போன பாணரும் செய்வதறியாமல் விலகி நின்றார்.
  காவிரிநீரை முகர்ந்த பிறகு லோகசாரங்கர் கோயிலுக்குள் வந்தார். ரங்கநாதர் சந்நிதிக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. திறக்க முயன்றும் முடியவில்லை. திகைப்புடன் வீட்டிற்கு சென்றார். தூக்கத்தில் ஆழ்ந்தார். அடியார்களைப் பழித்தால் அரங்கனால் பொறுக்க முடியுமா? அன்றிரவே ரங்கநாதர், லோகசாரங்கரின் கனவில் தோன்றி, ""நீர் காவிரிக்கரையில் கண்ட நம் பாணரை, உமது தோள்களில் சுமந்து கொண்டு நமது சந்நிதிக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வாரும்! என்று கட்டளையிட்டார்.
  லோகசாரங்கர் திடுக்கிட்டு எழுந்து பாணரைத் தேடி ஓடினார்.
  ரங்கநாதனின் உத்தரவைப் பணிவுடன் தெரிவித்தார்.
  பாணருக்கு இதுகேட்டு எல்லையில்லா ஆனந்தம். பாணரைத் தோள்களில் தாங்கியபடி கோயிலுக்கு வந்தார் லோகசாரங்கர். அங்கு அவர் அரங்கன் என்னும் "அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே, என்று உள்ளம் உருகிப் பாடினார். பெருமானின் அழகில் லயித்து, "அமலனாதிப்பிரான் என்று பத்து பாசுரங்களைப் பாடினார்.
  அன்றுமுதல் அவருக்கு "திருப்பாணாழ்வார் என பெயர் உண்டானது. லோகசாரங்க முனிவர் சுமந்து வந்ததால் "முனி வாகனர் என்றும் அழைக்கப்பட்டார். திருப்பாணாழ்வார் மந்திர உபதேசம் பெற்று அரங்கனையே தன் உயிராக எண்ணி வாழ்ந்து மோட்சம் அடைந்தார். கருடன், கந்தர்வர், கின்னரர், சனகாதி முனிவர்கள் புடைசூழ வைகுண்டம் அடைந்து பெருமாளுடன் வாழும் பாக்கியத்தைப் பெற்றார்.
  சுலோசனா, சென்னை.
  
  கடவுளே எல்லாம் செய்கிறார்!

  சொர்க்கத்தின் வாசல் மூடப்பட்டிருந்தது. உள்ளே நுழைய முயன்ற ஒருவரை தேவதூதர், நில் அங்கே!, என்று தடுத்து நிறுத்தினார். நான் வைக்கும் பரீட்சையில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பேன்! என்றார். தலையசைத்த அவரிடம்,  இதன் உள்ளே செல்லும் அளவுக்கு நீங்கள் என்ன நல்லது செய்தீர்கள் ?, என்றார் தேவதூதர். தான் செய்த நற்செயல்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். வாரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபடுவேன், என்றார் அவர். அதற்கு தூதர் மூன்று மதிப்பெண் வழங்கினார். குழந்தைகள் கல்வியளிக்கும் நோக்குடன் பள்ளிக்கூடம் நடத்தினேன், என்றார். இப்போது ஐந்துமதிப்பெண் கிடைத்தது. ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தேன், என்றார். அப்படியா!, என்று கேட்ட தூதர் அதற்கும் ஐந்து மதிப்பெண் வழங்கினார்.

  இந்த நிலையில் மதிப்பெண் வாங்கினால் முப்பத்தைந்து மதிப்பெண் வாங்கி பாஸ் கூட செய்ய முடியாதே என்ற கவலை வந்துவிட்டது அவருக்கு. சற்று யோசித்தவராய், தன் கைகளைக் குவித்து நின்று கொண்டார். நான் செய்த செயல் ஒவ்வொன்றும் கடவுளால் தான் நடந்தது. சாதாரண மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்? கடவுளின் கருணையே எனது நற்செயலுக்கும் தீய செயலுக்கும் காரணம். எல்லாம் அவரால் நடந்தது, என்று சொல்லி பட்டியல் இடுவதை நிறுத்திக் கொண்டார். அப்போது சொர்க்கத்தின் வாசல் தானாகவே திறந்து அவருக்கு வழிவிட்டது.


  ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
  வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான். இருந்தாலும் அவன், ""பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது! என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார். வேலு அவரிடம், ""சுவாமி! என்னைப் போல ஒரு விவசாயிக்குத் தான் எப்ப வெயிலடிக்கணும்! எப்ப மழை பெய்யணுங்கிற விபரம் நல்லாத் தெரியும். உங்களைப் போல தேவலோகத்தில் இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி விஷயத்திலே அனுபவமில்லே! என்றான். பிள்ளையாரும்,""நீ சொல்றது உண்மை தான்! இன்று முதல் மழை, காற்று, வெயில் தேவதைகள் எல்லாமே உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். நீ நினைச்சபடி வேலை வாங்கிக் கொள், என்று வரம் அளித்தார்.

  இனிமேல் மனம் போல வேலை வாங்கி நிறைய மகசூல் அடையலாம் என்று வேலு மனதில் சந்தோஷம் கொண்டான்.
  காலையில் எழுந்ததும் வானத்தை நோக்கினான். ""மழையே இப்போதே பெய்! என்று ஆணையிட்டான். என்ன ஆச்சரியம்! பிள்ளையார் அளித்த வரத்தின்படியே நடந்தது. வானில் கருமேகம் கூடியது. மழை கொட்டத் தொடங்கியது. வயலுக்குச் செல்ல ஆயத்தமானான். கலப்பையுடன் வாசலுக்கு வந்தான். ""மழையே! இப்போது நீ நிற்கலாம்! என்றான். மழையும் நின்றது. ஈரமான வயலை கலப்பையால் உழத் தொடங்கினான். காற்றை அழைத்து சீராக வீசச் செய்து விதைகளைத் தூவினான். மழை, வெயில், காற்று என எல்லாம் அவன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தன. பயிர்கள் பச்சைப் பசேல் என வளர்ந்து நின்றன. காற்றில் பயிர்கள் நர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ந்தான். அறுவடை காலம் வந்துவிட்டது. வேலு பயிரை அறுக்கத் தொடங்கினான். அதில் தானியம் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான். வேலுவுக்கு கண்ணீர் வந்தது. குளக்கரைக்கு ஓடினான். அங்கு பிள்ளையார் "சிவனே என அமர்ந்திருந்தார்.
  ""அப்பனே! என அவரது காலில் விழுந்து அழத் தொடங்கினான்.

  ""மழை, காற்று, வெயில் எல்லாமே தகுந்த நேரத்தில் இருந்தும் பயிர்கள் தானியங்களைத் தரவில்லையே! என் உழைப்பு வீணாகி விட்டதே! ஏன்? என்றான். இப்போதும் பிள்ளையார் புன்முறுவல் பூத்தபடி அவன் முன் தோன்றினார். ""வேலு! என் கட்டுப்பாட்டில் அவை இருந்தபோது, இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்ந்தன என்று நீ யோசிக்கவில்லை. நிலம் நன்றாக விளைந்து வருமானம் செழித்த போது, உலக மக்கள் என்னை நினைத்துப் பார்த்தார்களா? எல்லாம் அவரவர் திறமையால் வந்ததாக மார்தட்டிக் கொண்டனர். இறைவனாகிய நான் வகுத்த சட்டதிட்டங்களை மறந்து, பணம் தந்த மமதையால் தேவையில்லாத கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டார்கள். அதில் நீயும் அடக்கம். அது மட்டுமல்ல! வாழ்வில் போராட்டமே இல்லாவிட்டால் ஏது ருசி? சோம்பேறித்தனம் தான் மேலிடும். எனவே தான் இயற்கையை என் கட்டுப்பாட்டில் வைத்து, மக்கள் அட்டூழியம் செய்யும் போது பூகம்பம், புயல் முதலான சீற்றங்களை தருகிறேன். அந்த சமயத்தில், நீங்கள் பயத்தில் என்னைச் சரணடைகிறீர்கள். அதனால் தான் நான் உலகின் முதலாளியாக இருக்கிறேன். புரிகிறதா! என்றார். பதில் சொல்ல முடியாத வேலு தலை குனிந்தான்.


  எல்லா சாமியும் ஒண்ணுதான்!
  ஒரு இளைஞன் நதிக்கரை ஒன்றில் நின்று, அதை எப்படி கடப்பதென ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது, புத்த மத பிட்சு ஒருவர் அங்கே வந்தார். அவரிடம், பிட்சுவே! இந்த நதியைக் கடக்க வேண்டும். வழி சொல்லுங்களேன்! என்றான். கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நீந்து. எத்தகைய காட்டாற்று வெள்ளத்தையும், அதில் வரும் சுழல்களையும் கடக்க அவர் அருள் செய்வார், என்றார் பிட்சு.எங்கே! நீங்கள் கடந்து காட்டுங்களேன்! என்றான் இளைஞன். பிட்சு சற்றும் யோசிக்காமல், புத்தம் சரணம் கச்சாமி என்று வணங்கியபடியே தண்ணீரில் குதித்தார். எப்படியோ, நீந்தி அக்கரை சேர்ந்து விட்டார். இளைஞனும், விநாயகப்பெருமானே! தடைகளையெல்லாம் அகற்றி என்னைக் காப்பாற்று! என்றபடியே தண்ணீரில் குதித்தான்.கொஞ்ச தூரம் நீச்சலடித்து சென்றிருப்பான். சுழல் ஒன்று அழுத்தியது.ஐயையோ! இதிலிருந்து தப்பவேண்டுமானால், விநாயகரை விட, அவரைப் பெற்ற சிவனை நம்பாலாமோ என சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்தான். இன்னும் கொஞ்ச தூரம் கடக்க, கடும் இழுப்பாய் இருக்கிறதே! இதிலிருந்து தப்ப அவர் தம்பி முருகனைநம்பினால், வேலை வீசி எறிந்து இதைக்கட்டுப்படுத்துவாரோ! என்று ஒவ்வொருவராய் நினைத்தபடி பாதி தூரம் கடந்தான்.இன்னும் சற்று நேரத்தில் வெள்ளத்தின் வேகம் அதிகமாக, வேறெந்த சுவாமியை வணங்குவது என யோசிப்பதற்குள் வெள்ளம் அவனை அடித்துச் சென்று பாறையில் மோதியது. அவன் ரத்தம் வழிய அமர்ந்திருந்தான். அப்போது ஒரு துறவி, அவ்வழியே நீந்தி வந்தார். பாறையில் ஏறி அவன் நிலையைக் கேட்டார்.அப்பா! தெய்வம் ஒன்று தான். நாம் தான் பல உருவங்கள் கொடுத்து பிரித்து வைத்திருக்கிறோம். ஒன்று காப்பாற்றும், ஒன்று கை விடும் என்றெல்லாம் இல்லை. நீ எந்த வடிவை நம்புகிறாயோ, அதையே கடைசி வரை நம்பு. காப்பாற்றப்படுவாய்! என அறிவுரை கூறி, அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார்.
  


  No comments:

  Post a Comment