Saturday 26 April 2014

மடுகரை

வெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவையின் அம்சம். சிவனுக்கு உகந்த இந்த துர்க்கை, எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு இடப்புறம் தனக்கென்று ஓர் இடம் பிடித்து, வடக்கே முகம் காட்டி அருள்மழை பொழிபவள். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம், கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள மடுகரை என்ற கிராமத்தில் தனியே கோயில் கொண்டு, தன்னாட்சி நடத்துகின்றாள் துர்க்கை. வித்தியாசமாக இத்தலத்தில் இவள் கிழக்கே  திருமுகம் காட்டி எழுந்துள்ளாள். எட்டு கரங்கள் கொண்டு சிம்மத்தின் மீது வீற்றிருந்து பக்தர்களைக் காத்திடும் காவல் தெய்வமாய் காட்சியளிக்கிறாள். இந்த  துர்க்கை, கோயில் கொண்ட நாள் முதல் பக்தர்களது கனவில் வந்து, அவர்களிடம் பேசி,  அவர்கள் குறைகளை களைவது வழக்கம். அப்படியொரு நாள் இரவு  தனது கோயிலுக்கு அருகே வந்த ‘இருசப்பன்’ என்ற பக்தனைத் தட்டி எழுப்பி தனது சூலாயுதத்தை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரை மீது  செல்வதாகச் சேதி சொன்னாள். உடனே ஊரார் துணையோடு ஓடிச்சென்ற இருசப்பன் சூலத்தை மீட்டு வந்தான். இப்போது அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்க்கையின் கரத்தில் தவழ்கிறது. இதுபோன்ற அற்புத சம்பவங்கள் இவளால் இங்கு நித்தமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னைக்கு விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் குறைகளைக் களைந்து அன்பர் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்தும் அன்னை இவள். அதோடு, இங்கு தனியே சனீஸ்வர பகவான் எழுந்தருளி அனுகிரகம் செய்வதால், இவர் அனுக்கிரக சனி எனப் போற்றப்படுகின்றார். எங்குமே காணக் கிடைக்காத வட்ட வடிவ அமைப்பில் நவகிரகங்களை இங்கு தரிசிக்கலாம்.  ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன. நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் மிகவும் கோலாகலமாக இருக்கும்.  நிவேதன பிரசாதத்தோடு, குங்குமமும், வளையலும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்தில் அன்னை அஷ்டபுஜ துர்க்கை இங்கே அழகாய் திகழ்வாள். பக்தர்களிடம் நேரில் பேசும் இந்த எட்டுக்கர துர்க்கையை வழிபட, திருமணத்தடை நீங்கும். பிள்ளை வரம் கிட்டும். வழக்குகள் வெற்றியாகும். வம்புகள் தீரும். செல்வ வளம் கூடும். சிறப்புகள் வந்து சேரும் எங்கும், எதிலும் வெற்றி பெறலாம். எதிரிகள் நடுங்குவர்.  விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் பேருந்து களில் மடுகரை வரலாம். நெடுஞ்சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளதால் இங்கு வருவது மிகவும் சுலபமாகும்.

சின்னக்காவணம் 

சென்னை - பொன்னேரிக்கு அருகில் உள்ளது சின்னக்காவணம் கிராமம். இங்கு 500 வருடப் பழமையான நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில்  அமைந்துள்ளது. வடமொழியில், அஷ்டோத்ர ஈஷ்வர். இந்த ஊருக்கு பழங்காலத்தில் சதுர்வேதபுரம் என்றொரு பெயர் இருந்திருக்கிறது. ஒரு மாலைப் பொழுதில் இங்கு வந்த அகத்தியர், சிவபூஜை செய்ய விரும்பினார். அருகிலேயே பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த ஆற்று மணலை  எடுத்து, அருகிலிருந்த அங்கோள மரத்தடியில் நூற்றியெட்டு சிவ லிங்கங்களை உருவாக்கினார். ஆனால், இந்தச் செயலுக்கு முன்னால் வழக்கமாக  அனுசரிக்க வேண்டிய விநாயகர் பூஜையை செய்ய மறந்துவிட்டார். அதனால் அவர் 108வது லிங்கம் செய்ததும், அவை யாவும் ஒன்று சேர்ந்து ஒரு  விநாயகர் வடிவமாகிவிட்டன! (இன்றும் அந்த அங்கோள மரத்தடியில் விநாயகர் மூஞ்சூறு வால் போன்ற மிகச் சிறிய தும்பிக்கையுடன் அருளை  வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த அங்கோளப் பிள்ளையாருக்கு நேர்ந்துகொண்டு வடைமாலை சாற்றி வழிபட்டு, பலன் பெற்றோர் பலருண்டு.) தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகர் பூஜை செய்து, பிறகு, ஒரு சிவ லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கம் நூற்றெட்டீஸ்வரர்  என்கிற பெயரில் மூலவராகவே அமைந்துவிட்டது. நூற்றெட்டீஸ்வரி எனும் திருநாமத்தோடு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இந்தச் சிலை அங்கோள விநாயகருக்கு எதிரில் அமைந்துள்ளது. சதுர்வேதபுரமாக இத்தலம் விளங்கியபோது ஈஸ்வரன் சதுர்வேதபுரீஸ்வரராகவும், அம்பாள் சிவகாமி அம்மையாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். தெற்கு நோக்கி காட்சியளிக்கும் இந்த அம்பிகை, இரு கரங்களிலும் மலரேந்தி மகாலட்சுமி அம்சத்துடன் விளங்குகிறாள். அடுத்து இங்கு காண வேண்டியது  நடராஜர்-சிவகாமி உற்சவ விக்ரகம். 

இது ஒரு அற்புதமான கலைப் படைப்பாக விளங்குகிறது. இங்குள்ள பைரவர் மிகப் புராதனமானவர். வெளிச்சுற்றில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார். நல்ல உயரமாகவும் பெரிய ஆகிருதியுடனும் உள்ள ஊர். இவரைப் பிரார்த்தித்துப் பலன் அடைந்தோர் ஏராளம். துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், சிவசூரியன், நவகிரகங்கள்  ஆகியோரும் சந்நதி கொண்டு அருள்கிறார்கள். இக்கோயிலுக்கு அழகிய துவஜஸ்தம்பம் இருந்தாலும் 1919ம் ஆண்டுக்குப் பிறகு இக்கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடக்கவில்லை என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது. 1919ம் ஆண்டைய பிரம்மோற்சவ பத்திரிகையை இங்கே சட்டம் போட்டு மாட்டி வைத்திருப்பது, இக்கோயி லுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் ‘எப்போது மீண்டும் பிரம்மோற்சவம் நடத்தப் போகிறீர்கள்?’ என்று ஏக்கத்துடன் கேட்பது போல இருக்கிறது. கரையான் அரித்திருக்கும் அந்த பத்திரிகை தன் பழமையையும் கோயிலின் ஒரு நூற்றாண்டு காத்திருப்பையும் உணர்த்தி நெஞ்சைக்குத்துகிறது. 

இப்போது கோயிலில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. பங்குனி உத்திரத்தில் சுவாமியின் கல்யாண உற்சவம், மார்கழியில் திருவாதிரையை ஒட்டி  மாணிக்கவாசகர் திருவிழா பத்து நாள் உற்சவம், ஊர்வலம் என்று நடைபெற்றாலும் பிரம்மோற்சவம் காணாதது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. தலமரம் அங்கோளம் என்ற அழிஞ்சில் மரம். இதன் விதைகள் கீழே விழுந்தாலும் மீண்டும் இம்மரத்தின் கிளைகளில் போய் ஒட்டிக் கொண்டுவிடும்! இந்த மரத்திற்கு பெருநோயைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. முழுமை பெறாததாக விநாயகரின் வடிவம் அழிஞ்சில் மரத்தடியில் காணப்படுகிறது. இந்த மரம் மற்றும் கோயில் பற்றி காஞ்சி பரமாச்சார்யார் தம் அருளுரைகளில் சிறப்பித்திருக்கிறார்.

பொன்னேரியில் உள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், சித்திரை மாதப் பௌர்ணமி அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி அருகிலுள்ள அனுமார்  கோயிலுக்கு வந்து சேரும். அதேசமயம் பிரம்மோற்சவத் திருவிழாக் காணும் ஆயர்பாடி ஹரி கிருஷ்ணப் பெருமாள் இங்கு வந்து சேர்ந்து  மாப்பிள்ளை குடும்பத்தாரும் மைத்துனருமாய் சேர்ந்து அருள் தருவார்கள். பரத்வாஜ மகரிஷிக்கு இப்படிப்பட்ட கோலத்தில்தான் இறைவர்கள்  தரிசனம் தந்ததாகவும், அதனால் இவ்விழா நடப்பதாகவும் கூறுகிறார்கள். சைவ-வைணவ இணக்கத்தை உறுதிப் படுத்துவதுபோல் பொன்னேரியில் உள்ள கடைத்தெருப் பகுதி ஹரிஹரன் பஜார் என்றழைக்கப்படுகிறது.  வடலூர் ராமலிங்க வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊரும் சின்னக்காவணம்தான். ராமலிங்க வள்ளலார் பிறந்த எட்டாம் மாதம்  தகப்பனார் காலமானதால்,  சின்னம்மையார் பிறந்த வீட்டுக்கே, அதாவது, சின்னக் காவணத்துக்கே குழந்தையுடன் வந்து விட்டார். 

கி.பி. 1824  முதல் 1826 வரை வள்ளலார் இங்குதான் வளர்ந்தார். தாயார் அவரை அடிக்கடி நூற்றெட்டீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சி ன்னம்மையார் வாழ்ந்த வீடும், அவர் தண்ணீர் எடுத்த கிணறும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருத்தலத்தின் நாயகனாம் நூற்றெட்டீஸ்வரர் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்திப் பார்க்க பல சிவ அன்பர்கள்  ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

THIRUMOHOOR 

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், அர்ச்சாவதாரம் உருவத் திருமேனி கொண்டு நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் 108 கோயில் களில் காட்சி தருகிறார். நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் 60 கோயில் களில் ஒன்றுதான். மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புபெற்ற இக்கோயிலில் கருணைக் கடலான காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார். திருப்பாற்கடலில் கடைந் தெடுத்த அமுதத்தை தேவர்களுக்கு பெருமாள் வழங்கிய இடம் தான் திருமோகூர். 

12 ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான நம்மாழ்வாரும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  கிருத யுகத்தில் இந்திரன், துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம் பெற்றான். அவனுடைய செல்வங்கள் பாற்கடலில் மறைந்தன. இந்திராதி தேவர்கள் வலிமை யிழந்தனர். அசுரர் வலிமை அதிகரித்தது. இறவாமல் இருக்க நினைத்த தேவர்கள், பாற்கடலை கடைந்து அமுதம் பெற நினைத்தனர். மேரு என்கிற மந்திரமலையை குடைபோல் கவிழ்த்து மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் திரித்து தேவர்களும், அசுரர்களும் மாபெரும் சப்தத்தோடு கடையத் தொடங்கினார்கள். 

மெல்லமெல்ல அவ்விடம் வெம்மையாய் தகிக்க ஆரம்பித்தது. சட்டென்று கடுமை யான நெடியோடு காளகூடம் என்ற நஞ்சு, வாசுகி பாம்பினின்று பொத்துக் கொண்டு வெளியே எழுந்தது. அதன் வெம்மை அங்குள்ள வர்களை பொசுக்குவதுபோல் இருந்தது. அதைத்தாங்க முடியாத தேவக்கூட்டம் மஹாதேவனிடம் ஓடியது. ஈசன் நஞ்சை எடுத்து  அருந்தி, திருநீல கண்டனானார். பிறகு பாற்கடலில் இருந்து உச்சைச்ரவஸ் என்ற குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை, நினைத்ததை கொடுக்கும் கற்பகமரம், சந்திரன், அகலிகை, திருமகள், கவுஸ்துபமணி ஆகி யன ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்பட்டன.

அதன் பிறகு வந்த அமுதத்தை பருக, தேவர்களும், அசுரர்களும் சண்டை யிட்டனர். தேவர்கள் வலிமை இழந்தனர். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தா மனை வணங்கித் துதித்து, வழிகாட்டுமாறு  தேவியர்களிடம் வேண்டினர். தொட்டு எழுப்பினால் அபச்சாரம் என்று கருதி மானசீகமாக தேவர்களுக்கு அருளுமாறு தேவியர்கள் பெருமாளை பிரார்த்தித்தனர். அதையேற்று மனங்கவரும் மோகினியாய் வடிவத்தை மாற்றிக் கொண்டு திருக் கரங்களில் அமிர் தகலசத்தை ஏந்தினார் பெருமாள். பெண் ணழகில் மயங்கி அசுரர்கள் ஏமாற்றம் அடைய, தேவர்களுக்கு அமுதத்தை பங்கிட்டு கொடுத்தார். திருமாலாக காட்சி கொடுக்க வேண்டும் என்று தேவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று, திவ்ய மங்கள திருவுருவாக, இங்கு காட்சி யளிக்கிறார்.

மூலவர் கிழக்கு நோக்கி காளமேகப் பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சேவை சாதிக்கிறார். நீருண்டமேகம் போன்ற திருமேனியுடனும், சங்கு சக்கரங்கள் ஏந்திய திருக் கரங் களோடும், மேகம் கருணை கொண்டு மழைபொழிவதுபோல் இப்பெருமாள் அருள்மழை பொழிவதால் இவர் காளமேகப் பெருமாள் எனும் நாமம் பெற்றார். இவரை குடமாடு கூத்தன், தயரதம் பெற்ற மரகத மணித்தடம், சுடர் கொள் சோதி, திரு மோகூர் ஆப்தன் என்றும் ஆழ்வார்கள் பாடிப் பரவு கிறார்கள். இங்கு மூல வருக்கும் திரு மஞ்சனம் உண்டு. காளமேகப் பெருமாள் சந்நதிக்கு தெற்கு பக்கத்தில் தாயார் சந்நதி உள்ளது. 

மோகன வல்லி தாயார் என்றும் மோகவல்லி என்றும் திருமோகூர் வல்லி என்றும் அழைக்கப்படுகிறார். கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சி தருகிறார். வீதி உலா வரும்போது பெருமாள் மட்டும் கோயிலுக்கு வெளியே செல்வார். தாயார் எந்த காலத்திலும் கோயில் படியை தாண்டிய தில்லை. இதனால், தாயாரை படிதாண்டா பத்தினி என்று பக்தர்கள் போற்றுகின்றனர். இரண்டாம் திருச்சுற்றின் வடகிழக்கில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் பிரார்த்தனா சயனத்தில் காட்சியருள்கிறார். துவாதசி நாளில் திருமஞ்சனம் செய்வித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ் வான் எனும் அற்புதப் பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். திருமாலின் ஐந்து படைக்களன்களில் முதன்மையும், ஆதியந்தமுமில்லாததும், பெருமாளை விட்டு பிரியாததுமான சுதர்சனமுமே ஆகும். சுதர்சனம் என்றாலே காட்சிக்கு இனியவன், நல்வழிகாட்டும் நாயகன் என்று பல பொருள்கள் உண்டு. முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும், பின்புறம் நரசிங்கப் பெருமாளாகவும் காட்சிதரும்  திருக்கோலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.   
 
நாற்பத்தெட்டு தேவதைகள் சுற்றிலும் இருக்க, ஆறுவட்டங்களுக்குள் நூற்று ஐம்பத்து நான்கு எழுத்துக்கள் பொறித் திருக்க, பதினாறு திருக்கரங்களிலும், பதினாறு படைக் கலன்கள் ஏந்தி மூன்று கண்களுடனும் காட்சியளிக்கிறார். அவற்றில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருமுடி தீப்பரப்பி, நாற்புறமும் விரவி ஒளிர்கிறது. நரசிங்கப் பெருமான் நான்குவித சக்ராயுதங்களை ஏந்தி கால்களை மடித்து யோகநிலையில் காட்சியருள்கிறார். ஆனி மாதம் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தில் இங்கு நடத்தப்படும் சுதர்சன வேள்வி காண்போரை களிப்புற வைக்கிறது. பங்கு கொண்டோரை பவித்ரமாக்குகிறது. 

இப்பெருமானை ஆறுமுறையோ, ஆறின் மடங்குகளிலோ வலம் வந்தால் எண்ணிய செயல்கள் சட் டென்று நிறைவேறுகின்றன. மரணபயம் அறுத்தும், மனோவியாதியை ஒழித்தும், கன்னியருக்கு மாலை கொடுத்தும், காளையருக்கு வேலை கொடுத்தும், மக்கட்பேறை மட்டிலாது அளித்தும், தொழிலில் ஏற்படும் தோல்வியை நீக்கி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக நரசிம்ம சுதர்சனப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார்.  காளமேகப் பெருமாள் சந்நதிக்கு வடக்கு பகுதியில் ஆண்டாள் சந்நதி உள்ளது. ஆடி வீதி எனப்படும் 2ம் திருச்சுற்றில் தெற்கே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. நவநீத கிருஷ்ணனுக் கும் தனி சந்நதி உள்ளது. காளமேகப் பெருமாள் கோயிலில் நான் முகன் தவம் செய்துள்ளார். 

நான்முகனுக்கு தொல்லை கொடுத்த அரக்கர்களை கடலில் தூக்கி எறிந்த திருமாலுக்கு நன்றி செலுத்த உருவாக்கப்பட்ட பிரம்மதீர்த்த குளம் இங்கு உள்ளது.
கருட மண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் கரும்புவில், மலர் கணையுடன் மன்மதன் சிற்பமும், எதிரேயுள்ள தூணில் மன்மதனை பார்த்தபடி அன்னப் பறவையில் ரதிதேவி சிற்பமும் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணன் சிற்பங்கள் காளமேகப் பெருமாளை நோக்கி காணப்படுகின்றன. 

கம்பத்தடி மண்டப தூண்க ளில் மருது சகோதரர்களின் சிற்பம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவோண நாளில் ஆப்தன் என்றழைக்கப்படும் உற்சவர் எழுந்தருளுகிறார். சித்திரை முதல் நாளில் காள மேகப் பெரு மாளை காண மக்கள் கூடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு கூடும் கூட்டத்திற்கு கணக்கே இல்லை. நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் பிறந்ததால், விசாகத்தை நிறைவு நாளாக வைத்து பத்து நாள் திருவிழா நடத்தப்படுகிறது. திருத்தேரோட்டம், தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நடைபெறும். 


SREEVAANCHIYAM 
அத்ரி மகரிஷிக்கும், அனுசுயாவிற்கும் தத்தாத்ரேயர் மகனாகத் தோன்ற அருள் கிடைத்த தலம். சிவன் எமனை தமது வாகனமாகக் கொண்டுள்ள தலம். காசியில் இறந்தால் முக்தி ஆனால், பைரவ தண்டனை உண்டு. அதே ஸ்ரீவாஞ்சியத்தில்  இறந்தால் முக்தி கிடைப்பதுடன் பைரவ தண்டனையும் இல்லை என்பது சிறப்பு. இத்தலத்தில் இறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் காது மேல் நோக்கிக் கிடக்கும்; அதில் சிவன் பஞ்சாட்சர உபதேசம் செய்வார் எனக் கூறப்படுகிறது. இத்தல திருக்குளத்திற்கு குப்த கங்கை எனப் பெயர். இந்த தீர்த்தத்தில் கங்கை தன் 999 கலைகளுடன் ரகசியமாக வசிக்கிறாள். ஆனால், காசியிலோ ஒரு கலையுடன்தான் இருக்கிறாள். அதனால் இது காசியைவிட மேலானது என்பர். இந்த குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங்களும் விலகும். கார்த்திகை நீராடல் உற்சவத்தன்று சுவாமியும், அம்மனும் அஸ்திர தேவருடன் குப்த கங்கை கரையில் காட்சி தருவர்

MAHAALAKSHMIPURRESWARAR

'பறையொலியும் பாவொலியும் மற்றை
மறையொலியும் மண்டிப்பூம் பொழிலோடு
கூடிய திரிறின்றியூருறை யீசனே
கடனறுத்து பென்னொடு மணி நல்கி
பேரின்ப வெள்ளத்து மூழ்க்குவந் தன்னை
யேத்திச் சரணடைந் தார்க்கே'
என்பது அகத்தியரின் ஜீவநாடி வாக்கு.

கடனில் தத்தளித்து, பொருள் பற்றாக்குறையோடு ஏக்கம் மிக ஏந்தி வாழும் மக்கள்தம் குறை தீர பூலோகத்தில் வரம் அருளுகிறது திரிநின்றவூர் மகாலட்சுமிபுரி ஈஸ்வரர் கோயில். மன்னன் ஒருவன் சிதம்பர நடேசப் பெருமானை தினமும் தரிசிக்க இத்தல வழி செல்லுகையில், கையில் விளக்கேந்தி செல்வது வழக்கம். இத்தலத்தை அடைய திரி அணைந்தது. பின்னர் இத்தலம் தாண்டுகையில் தானே திரி எரிந்து நிற்க, இத்தலத்துக்கு திரி நின்றி ஊர் என பெயர் வந்தது. மகாவிஷ்ணுவும், திருமகளும் சேர்ந்து தொழுதமையால், திருநின்றியூர் என வழங்கப்பட்டது. மகாவிஷ்ணுவின் வர்ணம் நீலம். 

இங்குள்ள தீர்த்தத்திற்கு நீலப் பொய்கை என்றே பெயர். மந்த தோஷம் உடையோரும், சனியால் பீடிக்கப்பட்டோரும், பெரும் பிணியில் அவதியுறுவோரும் விமோசனம் பெறும் தீர்த்தம். மகாமக குளத்தில் நீராட இயலாதவர்கள் இத்திருக்குளத்தில் நீராட, சகல சுகபோகங்களும் சேரும் என்கின்றனர், சித்தர் பெருமக்கள். இங்குள்ள விநாயகருக்கு செல்வ கணபதி எனப் பெயர். பரசுராமர், ஜமதக்கினி ஆகிய முனிவர்களால் தொழுதேத்தப்பட்டவர். சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. சகல மேன்மைகளையும் தரவல்லவர்.

'தனம் வேண்டித் திரிவோர் தம்
இச்சை தீர்ப்பானிக் கணநாதன்
குபேர சம்பத்தை யருளுமிவனை
செல்வக் கணநாத னென போற்றுதுமே'
- என்ற சிவ வாக்கிய செய்யுள் போற்றத்தக்கது.

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் இந்த மகாலட்சுமிபுரீஸ்வரர், பரசுராமருக்கு காட்சி தந்தருளினவர். இத்திருக்கோயிலைச் சுற்றி மாலையிட்டதைப் போன்று மூன்று குளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜமதக்கினி முனிவரின் பத்தினி வானில் சென்ற கந்தர்வனின் அழகை பிம்பமாகத் தண்ணீரில் ரசித்ததைக் கண்டு, வெகுண்டு, தனது மகன் பரசுராமனைக் கொண்டு அவளுடைய தலையை துண்டிக்கப் பணிக்க, கொடுஞ்செயலைச் செய்யச் சொன்ன தந்தைக்கும், கொலைபாதகத்தை செய்த மகனுக்கும் பெரும் தோஷம் பற்றியது. 

பற்றிய தோஷத்தை நீக்க, பரசுராமனும், ஜமதக்கினி முனிவரும் இத்திருத்தலத்தை அடைந்து பூஜிக்க, சிவபெருமான் காட்சி தந்து தோஷமகற்றி, வெட்டுண்டு மாய்ந்த தாய்க்கு மேன்மை அருளினார். இது நடந்தது அமாவாசைத் திதியில். இன்றும் அமாவாசை திதி அன்று இறந்தவர்களுக்கு சாந்தியும், சந்தோஷமும் தர, இத்திருத்தலத்தில் பூசை புரிந்தால் பூர்ண பலனுண்டு என்கின்றார் பாம்பாட்டியார்.

'பாண வடிவாம் பரிகேசன் பரசுராமனுக்
கன்னையை வதமாக்க மொழிந்த தோஷங்
கழிக்க நின்றனன் பரசுராமலிங்க மாய்,
மைந்தர்க் காய் நிலைத்தனன் தமை மதியிலா
திதி யேத்த வல்லார் குலத் தாவியர் தம்
அகமே யமைதியாகி யின்புறப் பாரே'

-எனும் செய்யுள் நமக்கு தெளிவைத் தருகிறது. பரசுராமருக்கு காட்சி தந்த இறைவன் 'பரசுராமலிங்கமாய்' இன்றும் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கின்றார். ஜமதக் கனிக்கு காட்சி தந்த அருட்கடவுள் ஜமதக்னீஸ்வரர்' என்று சிறிய பாணவடிவிலும், 'பரிக்கேசுவரர்' என்று பெரிய பாணவடிவிலும் கொலு இருந்து பக்தர்கள் குறை தீர்க்கின்றார். திருவுடை மார்பன், மகாவிஷ்ணு அருகில் இருப்பது சாலச் சிறப்புடைத்து.

பயமின்றி வாழ, நோயற்ற வாழ்வு வாழ, பாவம் நீங்கி பெரும் சுகமெய்த, தனதான்ய ஐஸ்வர்யங்கள் சேர, அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரரை மாதுளம்பழ முத்துகளைக் கொண்டு அபிசேஷகம் செய்து தொழுவது சிறப்பு. இன்றும் கார்த்திகை மாதம் முழுவதும் தாய் ரேணுகாம்பாளுடன், ஜமத்கனி மகரிஷி உடன் பரசுராம மகரிஷி இத்தலத்தில் பூசை புரிகின்றார் என்கிறார் அகத்தியர்.

'அச்சமகலப் பிணிவாட வாட்டமிலா
பேரஸ்வரியமொடு பாவந்  நீங்கி
யின்பமே பெற பரசுராமரேத்து மிறை
தமை யீன்றாரோடு நின்று தொழ தேனாந்
திவ்களாண்டொன்றுந் தப்பாமே நிற்பதொப்ப
தொழுதெய்துவீர் யுலகத்தீரே'

என்ற ஜீவநாடி வாக்கியம் நுட்பமானது. மாதுளம் முத்துகள் மாணிக்க கற்களை யொத்தது. திருமகள் இந்த மாதுளம் முத்துக்களில் வாசம் செய்கின்றாள். இதனால் சிவபெருமானை அபிஷேகிக்க, அருச்சிக்க, சம்பத்துகள் குறைவின்றி சேரும்.

'பெண்டிர் மாங்கல்யத்திலு மஞ்சள் பூச்சிலுங்
குங்குமக் கைவளை பீதாம்பரத்துறை திருமகள்
மாதுளவித்திலுமமர யாராதனை திரிநின்றியூ
ரானை யாற்ற குறையகன்று பேரின்பஞ்
சேர சொன்னோஞ் சத்தியமே'

-என்று காகபுஜண்ட வாக்கு பறை சாற்றுகின்றது. அவசர புத்தியில் நாம பற்பல தவறுகளை செய்து விடுகிறோம். கணவன், மனைவி மனதை புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும் வண்ணம் செய்யுங் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசி சிரிப்பதும் அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுதலும், எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித் தரும். 'தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது முதுமொழி. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்னை வினை சிறப்புடையது என்பதே பொருள். 

முன் சொன்ன தோஷங்கள் நம்மை பெரும் துயருக்குள்ளாக்கும். தாய், தந்தையரைப் பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும், பின்னை பிறவியில். இவற்றிலிருந்து விடுபட்டு, பிறப்பிலா பேரின்பம் பெற்ற இம்மையில் சுகபோகத்துடன் வாழ திருநின்றியூருறை உலகநாயகி அம்மனை தொழுதேத்துதல் அவசியம். எப்படிப்பட்ட பாவங்களை அறியாது செய்தால், அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை 'சண்டாளம்' என்கிறார் பாம்பாட்டியார்.

'காமத்தால் கண்ட தோஷமொடு புறங்
கூறி பிறரை இழித்துரைத்து நின்ற ஏமமும்
நிறை நட்பை பழித்து வாணிப வழி தனமதுயற
மேபிசகிக் கூட்டிய பழியு மின்னோராயிரந் 
தோசந்தனை கருக்கிட நீலமலர்ப் பொய்கை
புகுந்து நீராடி வில்வமாந்தல விருட்சமாராதித்து
திரிநின்றவூரமர் பூவுலக நாயகி தமைத்
தண்டமடையப் போமே.'

சுயம்பு மூர்த்தியான இம்மகாலட்சுமி புரீசனை தொழுதேத்தாத தேவர்களே இல்லை எனலாம். மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஜோதி காலத்திலும் இவரை தொழுதக்கால் கிடைக்கும் பலன் மிகவும் அபரிமிதமானது. செல்வ கணபதி சுவாமியை அனுஷம் நட்சத்திரம் நாளில் தொழ வேண்டும். இப்படி பன்னிரண்டு மாதங்கள் விரதம் இருந்து சிரத்தையுடன் தொழுதபேருக்கு செல்வச் செழிப்பு கிடைக்கும் என்பது உண்மை.

'செல்வகணபதி தமையனுடத்தாராப்போர்
தம் அல்லல் போம் மனைதனில்
மிதக்கு மாஸ்தியே'

என்ற அகத்தியர் ஜீவநாடி நமக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகின்றது அன்றோ! கல்வியில் தேற, எண்ணியவாறு தொழில் கிட்ட, கிட்டிய தொழிலில் முன்னேறங்காண, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோளும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. சர்ப்ப தோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு அரும் மருந்தாவார் இந்தத் திருத்தலம் குடிகொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தி என்கிறார் கொங்கணர் என்னும் சித்தர்.

வித்தை பெருக, கீர்த்தி மிகுத்து வர, காதலில் ஜெயம் பெற, எண்ணிய மணாளனை அடைந்து இன்பம் பெற, தாய் தந்தையர் நீண்ட ஆயுளுடன் வாழ, மூதாதையர் ஆஸ்தி விருத்தியடைய, வெளிநாடு சென்று பெருந் திரவியம் சேர்க்க, நீண்ட காலம் இளமைப் பொலிவுடன் வாழ ஒவ்வொருவரும் இத்திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும், மயில் வாகனத்திலமர்ந்தருளாசி தரும் ஸ்ரீவள்ளி-தேவயானை சமேதரான சுப்பிரமணியரை பரிபூர்ண சரணாகதி செய்திட்டால் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இத்தலம் மயிலாடுதுறை - குத்தாலம் வழியில் அமைந்துள்ளது. கோயில் தொடர்புக்குத் தொலைபேசி எண்: 04364-320520.

No comments:

Post a Comment